தாய்-மகன் தூக்குப்போட்டு தற்கொலை
பெங்களூருவில், தாய்-மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்து உள்ளது.
ராஜகோபால்நகர்-
தூக்குப்போட்டு தற்கொலை
பெங்களூரு ஹெக்கனஹள்ளி கிராசில் வசித்து வந்தவர் சீனிவாஸ் (வயது 33). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். மேலும் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்தார். இந்த நிலையில் கிராமத்தில் வசித்து வந்த தனது தாய் பாக்யம்மாவை (57) கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனிவாஸ் தனது வீட்டிற்கு அழைத்து வந்ததாக தெரிகிறது.
பாக்யம்மாவை, சீனிவாஸ் வீட்டிற்கு அழைத்து வந்தது அவரது மனைவிக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதுதொடர்பாக சீனிவாசுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இதனால் சீனிவாசும், பாக்யம்மாவும் மனம் உடைந்து காணப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சீனிவாசும், பாக்யம்மாவும் ஒரே அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
போலீஸ் விசாரணை
நேற்று காலையில் சீனிவாசின் மனைவி எழுந்து பார்த்த போது சீனிவாசும், பாக்யம்மாவும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். சம்பவம் பற்றி அறிந்ததும் ராஜகோபால்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீனிவாஸ், பாக்யம்மாவின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பாக்யம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் பாக்யம்மாவும், சீனிவாசும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனாலும் தற்கொலைக்கு வேறு எதுவும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சீனிவாசின் மனைவி அளித்த புகாரின்பேரில் ராஜகோபால்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.