மூதாட்டி கொலை வழக்கில் ஆந்திராவில் பதுங்கிய தாய்-மகன் கைது
பங்காருபேட்டை டவுனில் மூதாட்டியை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கில் ஆந்திராவில் பதுங்கிய தாய், மகனை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பஸ்சில் தப்பியபோது சினிமா பாணியில் போலீசார் விரட்டிப்பிடித்தனர்.
கோலார் தங்கவயல்:
மூதாட்டி படுகொலை
கோலார் மாவட்டம் பங்காருபேட்டை டவுன் காரஹள்ளி பகுதியில் உள்ள சாந்தி நகரில் வசித்து வந்தவர் கீதா(வயது 74). இவர் கடந்த 14-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து மூதாட்டியை அடித்து கொன்று விட்டு பீரோவில் இருந்த தங்கநகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச்சென்றனர்.
பின்னர் பள்ளிக்கூடத்திற்கு சென்றிருந்த கீதாவின் பேரன் வீடு திரும்பினார். அப்போது அவர் வீட்டில் பாட்டி படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுபற்றி பங்காருபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கீதாவின் உடலை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
சினிமா பாணியில்...
அப்போது மர்ம நபர்கள் வீடு புகுந்து மூதாட்டியை கொன்றுவிட்டு ரூ.12½ லட்சம் மதிப்பிலான நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கீதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வந்தார்கள். விசாரணையில் கீதாவை கொன்று நகைகளை கொள்ளையடித்தவர்கள் அவற்றை ஆந்திர மாநிலம் குப்பம் டவுனில் உள்ள அடகு கடையில் அடகு வைத்திருப்பதும், திருப்பதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து பங்காருபேட்டை போலீசார், ஆந்திர போலீசாருடன் சேர்ந்து திருப்பதியில் பதுங்கி இருந்த கொலையாளிகளை கைது செய்ய சென்றனர். அப்போது அவர்கள் திருப்பதியில் இருந்து பெங்களூருவுக்கு பஸ் மூலம் தப்பிச் சென்று கொண்டிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளை சினிமா பாணியில் விரட்டிச்சென்று கைது செய்தனர்.
கைது
பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரனையில் அவர்கள் ஆந்திராவை சேர்ந்த ஆனந்த் கிரண்குமார் சிண்டே(45) மற்றும் அவரது தாய் சாந்தா பாய்(78) என்பது தெரியவந்தது. மேலும் கைதானவர்களை போலீசார் பங்காருபேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.