இது காதல் அல்ல அதையும் தாண்டி...! 2 குழந்தைகளின் தாய் கணவரின் தங்கையை திருமணம் செய்தார்...!
நட்பிலிருந்து காதலாக இது பரிணமித்ததை போல காதலிலிருந்து திருமணத்திற்கு இருவரும் தயாராகியுள்ளனர்.;
பாட்னா
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரமோத் தாஸ், இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சுக்லா தேவி என்கிற பெண்ணை திருமணம் செய்தார். தற்போது இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. வாழ்க்கை எப்போதும் போல இயல்பாக போய்க்கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஒரு நாள் தனது மனைவியும், அவரது தங்கையும் காணாமல் போயுள்ளனர். இதனால் அதிர்ந்து போன தாஸ் இருவரையும் தேடியுள்ளார்.
எங்கு தேடியும் இருவரும் கிடைக்கவில்லை. அன்று இரவு அவருக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. மறுமுனையில் பேசிய சுக்லா, தான் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டதாகவும் எனவே தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
தாசுக்கு எதுவும் புரியவில்லை. ஏனெனில் இத்தனை ஆண்டு திருமண வாழ்க்கையில் தங்களுக்குள் பெரிய அளவில் சண்டை, பிரச்சனை எதுவும் வரவில்லை, அப்படி இருக்கையில் ஏன் தன்னை விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்ய வேண்டும்? என்று யோசித்திருக்கிறார்.
அடுத்தடுத்த நாட்களில்தான் இதன் பின்னால் இருந்த உண்மை தெரியவந்துள்ளது. அதாவது சுகலா தேவி திருமணமாகி தாஸ் வீட்டுக்கு வந்ததிலிருந்து சாதாரணமாகதான் வாழ்க்கை நகர்ந்திருக்கிறது.
ஆனால், தாஸின் தங்கை சோனி மீது சுக்லாவுக்கு ஈர்ப்பு இருந்திருக்கிறது. இவர்கள் முதலில் நண்பர்களாகியுள்ளனர். பின்னர் ஒருவருக்கொருவர் நன்றாக பேசி புரிந்துக்கொண்டு நட்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அதாவது சுக்லா தனது நாத்தனாரை காதலிக்க தொடங்கியுள்ளார். இந்த விவகாரத்தை கேட்டு முதலில் ஆத்திரமடைந்த சோனு, நாட்கள் செல்ல செல்ல சுக்லாவை புரிந்து கொண்டுள்ளார்.
அவ்வளவுதான் காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கவே இருவரும் காதல் மழையில் நனைய தொடங்கி உள்ளனர். நட்பிலிருந்து காதலாக இது பரிணமித்ததை போல காதலிலிருந்து திருமணத்திற்கு இருவரும் தயாராகியுள்ளனர். எதிர்பார்த்ததைப் போலவே திருமணம் செய்து கொண்டு தனியாக வசிக்க தொடங்கியுள்ளனர்.
இந்த முழு விஷயத்தையும் கேட்டு புரிந்துக்கொண்ட சுக்லாவின் கணவர் தாஸ் இதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஓகே சொல்லிவிட்டார். இதை சுக்லா எதிர்பார்க்கவில்லை. எனவே திருமணமான புது ஜோடிகள் வாழ்க்கையை ரசித்து வாழ தொடங்கியுள்ளனர்.
ஆனால் சமூகம் மாமியார் என்கிற பெயரில் குறுக்கே வந்துள்ளது. இந்த திருமணத்தால் ஊரில் தன்னைப் பற்றி அவதூறாக பேசுவதாக கூறி தாஸின் தாய் தனது மகள் சோனுவை வலுக்கட்டாயமாக சுக்லாவிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்றுள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து தற்போது சுக்லா காவல்நிலையத்தை அணுகியுள்ளார். இது குறித்து ரோசரா போலீஸ் நிலைய ஆய்வாளர் கிருஷ்ண பிரசாத் கூறுகையில், "இந்த புகார் தொடக்கத்தில் வினோதமாக இருந்தது. பின்னர்தான் புகாரில் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்தோம். தற்போது இப்புகார் குறித்து விசாரிக்க ஒரு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை காவல்துறையில் கேட்டிருக்கிறோம்.
சுக்லாவின் காதல் விசித்திரமானதாக இருக்கிறது. அவர் தன்னை ஆண் போல காட்டிக்கொள்ள வேண்டும் என தலைமுடியை வெட்டி, நடை, உடை பாவனை என அனைத்திலும் ஆணாகவே மாறியிருக்கிறார். மட்டுமல்லாது பெயரையும் சுக்லா தேவி என்பதற்கு பதிலாக சூரஜ் குமார் என்று மாற்றிக்கொண்டார். வழக்கு குறித்து விரைவில் விசாரணை தொடங்கப்படும்" என்று கூறியுள்ளார்.