மெட்ரோ தூண் கம்பிகள் விழுந்து தாய், 2½ வயது குழந்தை நசுங்கி சாவு
பெங்களூருவில், மெட்ரோ தூண் கம்பிகள் சரிந்து விழுந்ததில் தாய், 2½ வயது குழந்தை உயிரிழந்த துயர சம்பவம் நடந்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.;
பெங்களூரு:
மெட்ரோ ரெயில் சேவை
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. தற்போது பையப்பனஹள்ளி-கெங்கேரி இடையிலும், நாகசந்திரா-எலச்சனஹள்ளி இடையேயும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பையப்பனஹள்ளி-ஒயிட்பீல்டு, சில்க்போர்டில் இருந்து தேவனஹள்ளி விமான நிலையம் வரையும் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
சில்க்போர்டு-தேவனஹள்ளி மெட்ரோ வழித்தடத்தில் எச்.பி.ஆர். லே-அவுட்டில் மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடந்து வந்தது. மெட்ரோ ரெயில் பாதைக்காக கான்கிரீட் தூண் கட்டுவதற்காக இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டு இருந்தன.
தாய்-குழந்தை சாவு
இந்த நிலையில் நேற்று காலை தூண் கட்டுவதற்காக பொருத்தப்பட்டு இருந்த இரும்பு கம்பிகள் திடீரென சரிந்து அந்த வழியாக சென்ற ஸ்கூட்டர் மீது விழுந்தது. இதில் அந்த ஸ்கூட்டரில் சென்ற ஒரு தம்பதி, 2 குழந்தைகள் கம்பிகளுக்கு அடியில் சிக்கி கொண்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கோவிந்தபுரா போலீசாருக்கும், மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், மெட்ரோ ரெயில் ஊழியர்கள் கம்பிகளின் இடிபாடுகளில் சிக்கி கொண்ட தம்பதி, 2 குழந்தைகளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் பெண்ணும், அவரது ஆண் குழந்தையும் உயிரிழந்தனர். பெண்ணின் கணவருக்கும், இன்னொரு குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சாப்ட்வேர் என்ஜினீயர்
இந்த சம்பவம் குறித்து கோவிந்தபுரா போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் பெயர் தேஜஸ்வினி (வயது 28) என்பதும், பலியான குழந்தையின் பெயர் விகான் (2½) என்பதும் தெரியவந்தது. காயமடைந்தது தேஜஸ்வினியின் கணவர் லோகித்குமார் மற்றும் அவரது மகள் என்பதும் தெரியவந்தது.. தேஜஸ்வினியும், லோகித்குமாரும் தார்வார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
லோகித்குமார் சிவில் என்ஜினீயர் ஆவார். தேஜஸ்வினி சாப்ட்வேர் என்ஜினீயர். அவர் மாண்டயா டெக் பார்க்கில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். கல்யாண்நகரில் லோகித்குமார், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
உறவினர்கள் போராட்டம்
நேற்று காலை 4 பேரும் இருசக்கர வாகனத்தில் கல்யாண்நகரில் இருந்து நாகவாரா நோக்கி சென்று கொண்டு இருந்த போது மெட்ரோ தூண் கம்பிகள் 4 பேர் மீது விழுந்ததும் இதில் தேஜஸ்வினியும், குழந்தை விகானும் உயிரிழந்ததும் தெரியவந்து உள்ளது.
இந்த நிலையில் தேஜஸ்வினி, விகான் உயிரிழந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் சம்பவம் நடந்த இடத்தில் ஒன்று கூடி மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
அலட்சியமாக மேற்கொள்ளப்பட்டு வந்த மெட்ரோ பணியால் தான் தேஜஸ்வினியும், விகானும் உயிரிழந்து விட்டதாக கூறி கோஷங்களும் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
காண்டிராக்டர் மீது வழக்கு
இந்த நிலையில் தேஜஸ்வினி, விகான் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காண்டிராக்டர், மெட்ரோ ரெயில் நிர்வாகம் மீது கோவிந்தபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு காண்டிராக்டருக்கு, மெட்ரோ ரெயில் நிர்வாகமும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்தை மத்திய மண்டல ஐ.ஜி. சந்திரசேகர், துணை போலீஸ் கமிஷனர் பீமாசங்கர் குலேத் ஆகியோரும் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2 பேரும் உறுதி அளித்தனர். நம்ம மெட்ரோ என்று பயணிகளால் அழைக்கப்படும் வரும் மெட்ரோ பணியின் போது இரும்பு கம்பி சரிந்து விழுந்ததில் தாய்-குழந்தை உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் 3 நாட்கள் பணிகளை நிறுத்தி வைக்கவும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
விசாரணைக்கு உத்தரவு
இந்த நிலையில் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "பெங்களூருவில் மெட்ரோ ரெயில் பாதைக்கு தூண் அமைக்கும் பணியின்போது அது சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்த முழுமையான விவரங்களை கேட்டுள்ளேன். இது மிகப்பெரிய துரதிருஷ்டம். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். கர்நாடக அரசு சார்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மெட்ரோ ரெயில் கழகமும் அதே அளவுக்கு நிவாரணம் வழங்குகிறது" என்று கூறினார்.