"அவர் செய்தது மன்னிப்பு கேட்பதற்கும் மேலானது"- ராணி எலிசபெத் குறித்து பேசிய ஜாலியன்வாலா பாக் அறக்கட்டளை செயலாளர்

1997 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் வந்து இருந்த இரண்டாம் எலிசபெத் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.;

Update: 2022-09-09 14:51 GMT

Image courtesy: AFP

அமிர்தசரஸ்,

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 96. கடந்த இரண்டு நாட்களாக மகாராணியில் உடல்நிலை ஆரோக்கியமாக இல்லை என்று தகவல்கள் வெளியாகின. உடல்நிலை மோசமான நிலையில் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்துவந்தார்.

இதனிடையே, பால்மோர இல்லத்தில் அவர் உயிர் பிரிந்தது பக்கிங்ஹாம் அரண்மனை செய்திக்குறிப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மரணத்தை அடுத்து, உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவர் குறித்த பல்வேறு சுவாரசியமான தகவல்களும் இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை பராமரிக்கும் அறக்கட்டளையின் செயலாளர் சுகுமார் முகர்ஜி ராணி இரண்டாம் எலிசபெத் குறித்து பேசியுள்ளார்.

முன்னதாக பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸின் 1919 ஆம் ஆண்டில் ஜாலியன்வாலா பாக்கில் சொற்பொழிவு நடந்துகொண்டிருந்தது. அதில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பங்கேற்று இருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஜெனரல் டயர் தலைமையிலான படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் நூற்றுகணக்கான இந்தியர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். ஆனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என அப்போது சொல்லப்பட்டது.

பின்னர் 1997 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் வந்து இருந்த இரண்டாம் எலிசபெத் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் தனது நாட்டின் சார்பாக மன்னிப்பு கேட்பார் என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால் அப்போது அது நடக்கவில்லை.

இதை நினைவு கூர்ந்து பேசிய சுகுமார் முகர்ஜி "இரண்டாம் எலிசபெத் இங்குள்ள ஜாலியன் வாலாபாக் பகுதிக்கு வந்தபோது தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார், மேலும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். ஒரு நாட்டின் ராணி அதைச் செய்வது சிறிய விஷயம் அல்ல. அது மன்னிப்புக்கு மேல் என்று நான் நினைக்கிறேன். "என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்