கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு பணிக்கு 3.77 லட்சம் பேர் தேர்வு: நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு பணிக்கு 3 லட்சத்து 77 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தெரிவித்தார்.

Update: 2022-12-21 23:51 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய பணியாளர் தேர்வாணையம், ஸ்டாப் செலக்ஷன் கமிஷன், ரெயில்வே தேர்வு வாரியம் ஆகியவை மூலம் மத்திய அரசு பணிக்கு 3 லட்சத்து 77 ஆயிரத்து 802 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

காலியிடங்களை உரிய நேரத்தில் நிரப்புமாறு அனைத்து அமைச்சகங்களுக்கும் கூறியுள்ளோம். மத்திய அரசு நடத்தும் 'வேலைவாய்ப்பு திருவிழா', வேலைவாய்ப்பை பெருக்க பயன்படுகிறது என்று அவர் கூறினார்.

மக்களவையில், போதைப்பொருள் நடமாட்டம் குறித்த விவாதத்தில் பேசிய உறுப்பினர்கள், போதைப்பொருளை கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் எடுக்குமாறு வலியுறுத்தினர். அ.தி.மு.க. உறுப்பினர் ரவீந்திரநாத் பேசுகையில், ''போதைப்பொருளின் தீமைகள் குறித்து பள்ளிகளில் சொல்லி கொடுப்பதை கட்டாயமாக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

மாநில அரசுகளுக்கு அமித்ஷா அழைப்பு

இந்த விவாதத்துக்கு பதில் அளித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இதுவரை ரூ.97 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன. சில வளைகுடா நாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் வருவதாக தெரிய வந்துள்ளது. அதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இன்னும் 2 ஆண்டுகளில், போதைப்பொருள் வர்த்தகர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், சிறையில் இருப்பார்கள். போதைப்பொருளுக்கு எதிரான போர் மிகவும் சிக்கலானது. அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, இதை ஒழிக்க மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் போராட வேண்டும் என்று அவர் கூறினார்.

ஊழல் புகார்கள்

மக்களவை கேள்வி நேரத்தில், மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:-

ஊழல் அதிகாரிகளை தண்டிப்பதில், மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் அறிவுரைப்படி, கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 724 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், 55 புகார்களில், ஆணையத்தின் அறிவுரை பின்பற்றப்படவில்லை என்று அவர் கூறினார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ஜிதேந்திர சிங், ''கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அதிகமான குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளிகள் 4 ஆயிரத்து 798 பேர் மத்திய அரசு பணிக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்'' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்