திருமணம் ஆகாதவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை - அரியானா முதல்-மந்திரி அறிவிப்பு
இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த திட்டம் குறித்து அரசு முடிவெடுக்கும் என்று மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.;
சண்டிகர்,
அரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது 60 வயதான திருமணம் ஆகாத நபர் ஒருவரின் பென்ஷன் தொடர்பான புகாருக்கு பதிலளித்த அவர், அரியானா மாநிலத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் மாதாந்திர உதவித்தொகை வழங்க உள்ளதாக அறிவித்தார்.
இதன்படி 45 வயது முதல் 60 வயது வரையிலான திருமணம் ஆகாதவர்களுக்கு உதவித்தொகை வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த திட்டம் குறித்து அரசு முடிவெடுக்கும் எனவும் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 2 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரியானாவில் தற்போது மூத்த குடிமக்கள், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுப்பாலினத்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் திருமணம் ஆகாதவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.