திரிபுரா சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 7-ந்தேதி தொடக்கம்
திரிபுரா சட்டசபையின் நான்கு நாள் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 7-ந்தேதி தொடங்கும் என்று சபாநாயகர் பிஸ்வபந்து சென் இன்று தெரிவித்தார்.;
அகர்தலா,
திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி மந்திரி பிரணாஜித் சிங்க ராய் தாக்கல் செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் திரிபுரா சட்டசபையின் நான்கு நாள் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 7-ந்தேதி தொடங்கும் என்று சபாநாயகர் பிஸ்வபந்து சென் இன்று தெரிவித்தார். மேலும் இந்த மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்க நாளில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி மந்திரி பிரணாஜித் சிங்க ராய் தாக்கல் செய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக மழைக்கால கூட்டத்தொடர் மூன்று நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் ஐந்து நாட்கள் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு மதிப்பளித்து, நேற்று நடைபெற்ற வணிக ஆலோசனைக் குழு (பிஏசி) கூட்டத்தில் மழைக்கால கூட்டத்தொடரை நான்கு நாட்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டது.