ஐகோர்ட்டு நீதிபதியின் பெயரை பயன்படுத்தி வாட்ஸ்அப் வழியே மற்றொரு நீதிபதியிடம் பணமோசடி

ஐகோர்ட்டு நீதிபதியின் புகைப்படம் ஒன்றை முகப்பு பக்கத்தில் கொண்ட தொலைபேசி எண் வழியே மாவட்ட நீதிபதி ஒருவருக்கு வாட்ஸ்அப் வழியே தகவல் ஒன்று வந்துள்ளது.

Update: 2024-05-25 10:10 GMT

புனே,

மராட்டியத்தில் ஐகோர்ட்டு நீதிபதியின் பெயரை பயன்படுத்தி மற்றொரு நீதிபதியிடம் ரூ.50 ஆயிரம் பணமோசடி நடந்துள்ளது. இதுபற்றி மும்பை போலீசில், ஐகோர்ட்டின் பதிவாளர் புகார் ஒன்றை அளித்துள்ளார். ஐ.பி.சி. மற்றும் ஐ.டி. சட்டத்தின் கீழ் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த புகாரில், ஐகோர்ட்டு நீதிபதியின் புகைப்படம் ஒன்றை முகப்பு பக்கத்தில் கொண்ட தொலைபேசி எண் வழியே, சோலாப்பூர் மாவட்ட நீதிபதி ஒருவருக்கு வாட்ஸ்அப் வழியே தகவல் ஒன்று வந்துள்ளது. அந்த தகவலில் ரூ.50 ஆயிரம் பணம் கேட்கப்பட்டு இருந்தது.

அந்த நாளின் முடிவில் தொகையை திருப்பி தந்து விடுகிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நீதிபதிக்கு, அந்த ஐகோர்ட்டு நீதிபதியை நன்றாக தெரியும். அதனால், இதுபற்றி எதுவும் விசாரிக்காமல், நீதிபதி அந்த தொகையை அனுப்பி விட்டார்.

ஆனால், இதன்பின்னரும் இதேபோன்று தொகையை கேட்டு மற்றொரு தகவல் வந்துள்ளது. இந்த முறை சந்தேகம் அடைந்த அந்த நீதிபதி, ஐகோர்ட்டு அலுவலகத்தில் உள்ள பதிவாளரை தொடர்பு கொண்டுள்ளார்.

அதில், வாட்ஸ்அப்பில் புகைப்படம் பயன்படுத்தப்பட்ட அந்த நீதிபதி, பணம் எதுவும் கேட்கவில்லை என பதில் கிடைத்துள்ளது. இதனால், மாவட்ட நீதிபதி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதன்பின்னரே போலீசுக்கு புகார் சென்றுள்ளது. அதுபற்றிய விசாரணையில், ஐகோர்ட்டு நீதிபதியின் பெயர் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி இணையதளம் வழியே பணமோசடி நடந்தது தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்