கேரளா: பத்தனம்திட்டை அருகே குப்பையில் கிடந்த சாக்கு மூடையில் பணம்

சாக்கு மூடையில் இருந்த பணம் திருடப்பட்டதாக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

Update: 2022-10-17 23:06 GMT

கோப்புப்படம் 

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பத்தனம்திட்டை அருகே உள்ள வள்ளிக்கோடு என்ற இடத்தில் சாலையோரம் குப்பைகளை கொட்டும் இடத்தில் நேற்று காலையில் கட்டப்பட்ட நிலையில் ஒரு சாக்கு மூடை கிடந்தது. அதன் அருகே கேரள பெண்கள் அணியும் ஒரு புத்தம் புதிய சேலையும் இருந்தது.

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த சாக்கு மூடையை அவிழ்த்து பார்த்தனர். அப்போது அதில் 10, 20, 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து அருகில் கிடந்த சேலையை எடுத்து பார்வையிட்ட போது அது கோன்னியில் உள்ள ஒரு கடையில் இருந்து வாங்கியது தெரிய வந்தது. சேலையுடன் பணத்தை வீசி சென்றவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை. இந்த பணம் திருடப்பட்டதாக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

அதை வீசி சென்ற நபரை அடையாளம் காண அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், சேலை வாங்கிய கடைக்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்