3 மாதங்களில் பணம் இரட்டிப்பு... ஆசை காட்டி 5 ஆயிரம் பேரிடம் ரூ.2 ஆயிரம் கோடி பணமோசடி

மத்திய பிரதேசத்தில் 3 மாதங்களில் பணம் இரட்டிப்பாக தரப்படும் என ஆசை காட்டி, 5 ஆயிரம் பேரிடம் ரூ.2 ஆயிரம் கோடி வரை பணமோசடி நடந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்து உள்ளது

Update: 2023-05-08 13:08 GMT

போபால்,

மத்திய பிரதேசத்தில் பாலகாட் மாவட்டத்தில் வசித்து வருபவர் சுமேந்திரா கங்கிரம். கட்டுமான தொழிலதிபர் என கூறி கொண்டு, கிராமவாசிகளிடம் 2019-ம் ஆண்டில் இருந்துபணம் சேகரித்து வந்து உள்ளார். உங்களது பணம் 3 முதல் 4 மாதங்களில் இரட்டிப்படைந்து திருப்பி தரப்படும் என கூறியுள்ளார்.

உங்களுடைய பணம் முழுவதும் தனது ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யப்படும் என கூறியுள்ளார். கிராமவாசிகளிடம் பணம் வசூலிக்க என்று தனியாக நிறைய ஆட்களை அவர் வைத்திருக்கிறார்.

முதலில் சேகரித்த பணத்திற்கு பதிலாக, பெரிய தொகையை திருப்பி கொடுத்து இருக்கிறார். இதனால், அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டு, கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த தொகை எல்லாவற்றையும் கொண்டு சென்று சுமேந்திராவிடம் கொடுத்து உள்ளனர்.

அவரது நிறுவனத்தில், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.50 லட்சம் வரை பணம் போட்டிருக்கிறார்கள். சிலர் கருப்பு பணமும் முதலீடு செய்து உள்ளனர். முதலீடு திரும்ப வந்த ஆசையில், நிறைய பேர் இந்நிறுவனத்தில் இணைந்து உள்ளனர். ஆனால், ஒருவரும் போலீசில் இதுபற்றி புகார் அளிக்கவில்லை.

போலீசாருக்கு தெரிந்தே இந்த தொழில் நடந்து வந்து உள்ளது. 2019-ம் ஆண்டில், முறையற்ற வகையில் பணம் சேமிக்கும் திட்டத்திற்கு எதிராக மத்திய அரசு சட்டம் ஒன்றை கொண்டு வந்தது.

இதன்படி, சட்டவிரோத பணம் சேகரிப்புக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது. மத்திய பிரதேச அரசும் இதேபோன்ற சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த சட்டத்தின் கீழ் அந்த நிறுவனத்திற்கு எதிராக போலீசில் எப்.ஐ.ஆர். பதிவானது. பணம் பறிமுதல் செய்யப்பட்டு, சுமேந்திரா மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.

தொடர் விசாரணையில், இந்த நிறுவனம் சத்தீஷ்கார் மற்றும் பிற மாநிலங்களிலும் செயல்பட்டு வந்துள்ளது தெரிய வந்தது. இதனால், 5 ஆயிரம் பேரிடம் ரூ.2 ஆயிரம் கோடி பணமோசடி நடந்து உள்ளது என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கும்படி அரசிடம் கடிதம் ஒன்றை போலீசார் அனுப்பி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்