மாணவியை ஆபாச வீடியோ எடுத்த சக மாணவிகள் 3 பேர் மீது வழக்கு

உடுப்பி கல்லூரியில் கழிவறையில் மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்த வழக்கில் சக மாணவிகள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-07-26 21:40 GMT

மங்களூரு:

உடுப்பி கல்லூரியில் கழிவறையில் மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்த வழக்கில் சக மாணவிகள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மாணவி ஆபாச வீடியோ

கர்நாடக மாநிலம் உடுப்பி டவுன் அம்பலபாடி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கல்லூரியில் படித்து வந்த மாணவிகள் 3 பேர் கழிவறையில் செல்போன் கேமரா மூலம், சக மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் இந்த வீடியோவை அந்த மாணவிகள், கல்லூரியில் உள்ள ஆண் நண்பர்களின் வாட்ஸ்-அப் குழுவிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்திடம் முறையிடப்பட்டது.

3 மாணவிகள் இடைநீக்கம்

இதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் 3 மாணவிகளையும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் மாணவிகள் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதாக தகவல் வெளியானது. இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. மேலும் போலீசாருக்கும் தகவல் கிைடத்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுதவிர கல்லூரிக்கு சென்று 3 மாணவிகளின் ஆண் நண்பர்கள் மற்றும் வாட்ஸ்-அப் குழுவில் இருந்தவர்களின் செல்போனை வாங்கி போலீசார் ஆய்வு செய்தனர். பின்னர் சமூக வலைதளங்களிலும் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டதா? என்பதை ஆய்வு ெசய்தனர்.

புகார் கொடுக்கவில்லை

இந்த ஆய்வில் சமூக வலைதளத்தில் எந்த வீடியோவும் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்று போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர்.

இதுகுறித்து நேற்று முன்தினம் பேட்டியளித்த, உடுப்பி போலீஸ் சூப்பிரண்டு அக்சய் மச்சீந்திரா, இதுவரை மாணவிகள் எடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகவில்லை. மேலும் கல்லூரி நிர்வாகம் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பிலும் இதுகுறித்து புகார் அளிக்கப்படவில்லை. இதனால் மாணவிகள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. கல்லூரி நிர்வாக மட்டத்திலேயே இந்த விவகாரம் பேசி முடிக்கப்பட்டுவிட்டது என்று கூறினார்.

கண்டனம்

இதற்கு பா.ஜனதா, இந்து அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்தநிலையில் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ராஷ்மி சாவந்த் என்ற கர்நாடகத்தை சேர்ந்த மாணவி, உடுப்பி சம்பவத்தில் உண்மை மூடி மறைக்கப்பட்டுள்ளது. இதேபோல பல மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

3 மாணவிகள் மீது வழக்குப்பதிவு

இந்த நிலையில் மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்த விவகாரத்தில் நேற்று உடுப்பி மல்பே போலீசாா் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தனர்.

அதாவது குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 மாணவிகள் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவாகி உள்ளது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 509-வது பிரிவு (ஆபாச வீடியோ எடுத்து பெண்ணை அவமதித்தல்) 209-வது பிரிவு (பெண்ணை மனதளவில் காயப்படுத்துதல்), 175-வது பிரிவு (வீடியோ ஆதாரத்தை அழித்தல்), 34-வது பிரிவு (பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது) 89-வது பிரிவு (சட்டவிதிகள் மீறல்), 69 இ பிரிவு ( குற்றச்செயலை மறைத்தது) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட மாணவி, சம்பந்தப்பட்ட மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்