வேலையின்மைதான் உண்மையான பிரச்சினை; 'மோடி உத்தரவாதம்' என்பது வெற்று கோஷம் - பிரியங்கா காந்தி

இந்திய நாட்டின் உண்மையான பிரச்சினையான வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு பா.ஜ.க-விடம் தீர்வு இல்லை என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.;

Update: 2024-01-30 16:57 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, இன்று தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், இஸ்ரேலில் வேலை செய்ய ஆட்களை தேர்வு செய்யும் நிறுவனத்தில் இந்திய வாலிபர்கள் நீண்ட வரிசையில் நிற்கும் வீடியோ இடம் பெற்றிருந்தது.

அந்த வலைத்தளத்தில், பிரியங்கா காந்தி ஒரு பதிவும் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-

உலகில் எங்காவது போர் நடந்தால், அங்குள்ள நமது குடிமக்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதுதான் முதல் வேலையாக இருக்கும். ஆனால் இன்றைய சூழ்நிலையில், இளைஞர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து போர் நடக்கும் இஸ்ரேலுக்கு செல்கின்றனர். அவர்களை செல்லவிடாமல் மத்திய அரசால் தடுக்க முடியவில்லை.

அந்த இளைஞர்களுக்கு இந்தியாவில் ஏன் வேலை கிடைக்கவில்லை? 2 நாட்களாக வரிசையில் நிற்கும் அவர்கள், நம் நாட்டின் பிள்ளைகள் இல்லையா? இந்திய இளைஞர்களின் உயிரை தியாகம் செய்வதற்கு இஸ்ரேலுக்கு என்ன அடிப்படையில் இந்திய அரசு அனுமதி அளித்தது?

அதை இளைஞர்களின் தனிப்பட்ட பிரச்சினையாக மத்திய அரசு சித்தரிக்கிறது. உண்மையில், 'மோடி உத்தரவாதம்', 'ஆண்டுக்கு 2 கோடிபேருக்கு வேலை', '5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்' என்று சொல்வதெல்லாம் வெற்று கோஷங்கள்.

வேலையின்மையும், பணவீக்க உயர்வும்தான் முக்கியமான பிரச்சினைகள். அவற்றுக்கு பா.ஜனதா அரசிடம் எந்த தீர்வும் இல்லை. அதை இளைஞர்களும் உணர்ந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்