பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்; தெலுங்கானா முதல்-மந்திரி புறக்கணிப்பு

நிதி ஆயோக்கின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் அறிவித்து உள்ளார்.;

Update: 2022-08-06 22:25 GMT

புதுடெல்லி,

புதிய கல்விக்கொள்கை

நிதி ஆயோக்கின் அதிகாரம் மிகுந்த அமைப்பான ஆட்சி மன்றக்குழு ஆண்டுதோறும் கூடுகிறது. பிரதமர், மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேச துணைநிலை கவர்னர்கள் மற்றும் பல்வேறு மந்திரிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த கவுன்சிலின் 7-வது கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் நடக்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குப்பின் முதல் முறையாக நேரடியாக நடைபெறும் இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இதில் மாநில முதல்-மந்திரிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் பயிர் பல்வகைப்படுத்தல், பருப்பு மற்றும் எண்ணெய் வித்து உற்பத்தியில் தற்சார்பு, புதிய கல்விக்கொள்கை அமல்படுத்துதல் மற்றும் நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

புதிய சகாப்தம்

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், 'ஒரு நிலையான மற்றும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கான உந்துதலில், மத்திய மற்றும் மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் புதிய சகாப்தத்தை நோக்கி ஒருங்கிணைக்க இந்த கூட்டம் வழி வகுக்கும்' என குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் அடுத்த ஆண்டு ஜி20 உச்சி மாநாடு நடத்தும் நாடாகவும், தலைவராகவும் இந்தியா இருக்கும் நிலையில், இந்த திட்டங்களில் மாநில அரசுகளின் பங்களிப்பு குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று பின்னணியில் நாட்டு விடுதலை நூற்றாண்டுக்கு முந்தைய 25 ஆண்டுகளில் நுழையும் இந்த காலகட்டத்தில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சந்திரசேகர் ராவ் புறக்கணிப்பு

இந்த நிலையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மாநிலங்கள் மீதான மத்திய அரசின் தற்போதைய பாரபட்சமான போக்கை கண்டிக்கும் வகையில் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறியுள்ளார்.

வலுவான மற்றும் பொருளாதார ரீதியில் துடிப்பான மாநிலங்கள் மட்டுமே இந்தியாவை வலுவான நாடாக மாற்ற முடியும் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளார்.

அதேநேரம் இந்த கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்துள்ள பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் சிங் மான், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ உறுதி உள்பட பல்வேறு பிரச்சினைகளை இந்த கூட்டத்தில் எழுப்ப போவதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்