இந்தியாவில் இருந்து போதைப்பொருட்களை மோடி அரசு ஒழித்துக்கட்டும் - அமித்ஷா திட்டவட்டம்
இந்தியாவில் இருந்து போதைப்பொருட்களை மோடி அரசு ஒழித்துக்கட்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
சர்வதேச போதைப்பழக்க எதிர்ப்பு தினத்தையொட்டி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
போதைப்பொருட்களை சிறிதும் சகித்துக்கொள்வதில்லை என்ற கொள்கையை மத்திய உள்துறை அமைச்சகம் பின்பற்றி வருகிறது. அதன் பலன்கள் வரத்தொடங்கி உள்ளன. இந்தியாவில் இருந்து போதைப்பொருட்களை மோடி அரசு ஒழித்துக்கட்டும். இந்தியா வழியாக போதைப்பொருட்களை கடத்திச்செல்லவும் அனுமதிக்க மாட்டோம்.
ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் போதைப்பொருட்களை ஒழிப்பதில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். 'போதைப்பொருள் இல்லாத இந்தியா' என்ற இலக்கை எட்டுவோம். இந்த போரில் வெற்றி பெறும்வரை ஓய மாட்டோம்.
போதைப்பொருளுக்கு எதிரான போர் தொடருகிறது. இதன் பலனாக, 2014-ம் ஆண்டில் இருந்து 2022-ம் ஆண்டுவரை ரூ.22 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2006-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை கைப்பற்றப்பட்ட ரூ.768 கோடி போதைப்பொருட்களுடன் ஒப்பிடுகையில், இது 30 மடங்கு அதிகம்.
போதைப்பொருள் வியாபாரிகள் மீது 8 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 544 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, முந்தைய 8 ஆண்டுகளில் பதிவானதை விட 181 சதவீதம் அதிகம். இதுதவிர, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 6 லட்சம் கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இவையெல்லாம் போதைப்பொருள் இல்லா இந்தியாவை உருவாக்குவதில் மோடி அரசின் உறுதிப்பாட்டை காட்டுகின்றன. அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து மோடி அரசு நடவடிக்கை எடுப்பதால்தான் இது சாத்தியமானது.
போதைப்பொருளுக்கு எதிரான போர் தொடர்ந்து நடக்கிறது. ஆனால், மக்களின் பங்களிப்பு இல்லாமல் இப்போரில் வெற்றிபெற முடியாது. எனவே, ஒவ்வொருவரும் இப்போரில் பங்கேற்க வேண்டும். எங்கே போதைப்பொருள் வர்த்தகம் நடந்தாலும் அதுபற்றி பாதுகாப்பு அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
போதைப்பழக்கம், இளைய தலைமுறையை சீரழிப்பதுடன், அதன் வருவாய், தேச பாதுகாப்புக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. எனவே, போதைப்பொருட்களில் இருந்து அனைவரும் விலகி இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.