சீனா விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே மோடி அரசாங்கம் உண்மையாக இருந்திருக்க வேண்டும் - ஜெய்ராம் ரமேஷ்

சீனா விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே மோடி அரசாங்கம் உண்மையாக இருந்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.;

Update:2023-01-30 13:10 IST

புதுடெல்லி,

சீன விவகாரம் குறித்த மத்திய வெளியுறவுத்துறை மந்திரியின் கருத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2020 மே முதல் லடாக்கில் சீன அரசின் ஊடுருவல் குறித்து மோடி அரசு மேற்கொண்ட முதன்மையான உத்திகளை சுருக்கமாக, மறுத்தல், திசைதிருப்புதல், பொய்யுரைத்தல், நியாயப்படுத்துதல் என்று கூறலாம். காங்கிரஸ் கட்சியைத் தாக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்தும், சீனா கொள்கை விவகாரத்தில் மோடி அரசாங்கத்தின் தோல்வியை மறைத்து திசைதிருப்பும் ஒரு முயற்சியே. கடந்த 2020ம் ஆண்டு முதல் லடாகில் உள்ள 65 கண்காணிப்பு மையங்களில், 26 மையங்களை கையாளும் உரிமையை இந்தியா இழந்துள்ளது.

கடந்த 1962ம் ஆண்டு தனது நிலத்தை காக்க சீனாவுடன் இந்தியா போர் தொடுத்ததை இப்போதைய உண்மைகளுடன் ஒப்பிட முடியாது. 2020ம் ஆண்டுக்கு பின்னர் சீனாவின் ஆக்கிரமிப்பை இந்தியா ஒத்துக்கொண்டுள்ளது. இதனால் இந்தியா பல கிமீ பகுதிகளுக்கு தனது ஆளுமையை இழந்துள்ளது.

சில நேரங்களில் அவர்கள், 1962ம் ஆண்டு சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட சில நிலப்பரப்புகளைப் பற்றி பேசுகிறார்கள். அவைகள் முன்பு நடந்தது போன்ற எண்ணத்தை உருவாக்குவார்கள்.ஆனால் அவர்கள் உண்மையைக் கூற மாட்டார்கள்.

2017 ம் ஆண்டு சீனத் தூதரை ராகுல் காந்தி சந்தித்தாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மறைமுகமாக குற்றம் சாட்டியிருப்பது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. நாட்டின் நலனுக்காக வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு தொடர்பாக வெளிநாட்டு அதிகாரிகளைச் சந்திக்கும் உரிமை எதிர்க்கட்சித் தலைவருக்கு கிடையாதா?

சீனாவின் நெருக்கடி குறித்து தொடக்கத்தில் இருந்தே மோடி அரசாங்கம் உண்மையாக இருந்திருக்க வேண்டும். இது குறித்து நாடாளுமன்ற நிலைக் குழுவில் விவாதித்தும், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தியும் எதிர்க்கட்சிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். குறைந்த பட்சமாக, முக்கிய அரசியல் தலைவர்களுக்கு மட்டுமாவது இந்த விவகாரம் குறித்து விரிவான விளங்கங்களை அளித்திருக்க வேண்டும்.

பிரதமர் மோடிக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங் -க்கும் இடையில் சமுகமான உறவு இருக்கும் நிலையில் சீனா ஏன் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகில் இவ்வாறு அத்துமீறுகிறது என்று தனக்குத் தெரியவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் பல முறை தெரிவித்திருப்பது துரதிஷ்டமானது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்