மோடி அரசு திறமையின்மையால் பொருளாதாரத்தை அழித்து வருகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

திறமையின்மை, தெளிவற்ற தன்மையால் மோடி அரசு பொருளாதாரத்தை அழித்து வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

Update: 2022-09-03 01:30 GMT

Image Courtacy: PTI

புதுடெல்லி,

இந்தியா கடந்த 3 ஆண்டுகளில் வெறும் 3 சதவீத வளர்ச்சி மட்டுமே கண்டிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்களை சுட்டிக்காட்டி மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'பொருளாதாரத்ைத கையாளுவதில் பா.ஜனதா அரசின் திறமையின்மை மற்றும் தெளிவற்ற தன்மை நிரூபணம் ஆகியிருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கதையை பின்னோக்கி தள்ளியிருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை அழித்து வருகிறது' என்று குற்றம் சாட்டினார்.

5 டிரில்லியன் பொருளாதாரம், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு மற்றும் 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற வாக்குறுதிகளில் இருந்து மத்திய அரசு பின்வாங்குகிறதா? என கேள்வி எழுப்பிய அவர், இந்தியப் பொருளாதாரம் விரைவில் மீட்டமைக்கப்பட வேண்டிய நிலையில், நிதி மந்திரியோ பாரா முகமாய் இருப்பதாகவும் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வழிகளை மேற்கொள்வதற்கு பதிலாக, எதிர்க்கட்சி அரசுகளை மாற்றியமைப்பதில் மட்டுமே அரசின் செயல்பாடுகள் இருப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்