பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு சிறப்பு கவனம் செலுத்திய மோடி அரசு: மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்
மோடி அரசு சிறப்புக் கவனம் செலுத்தியிருப்பதாக மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.;
ஹமிர்பூர்,
மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு மோடி அரசு சிறப்புக் கவனம் செலுத்தியிருப்பதாக மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூரில் பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி பூண்டுள்ளதாகவும், விளையாட்டு அமைச்சகத்திற்கு முந்தைய பட்ஜெட்டைவிட இந்த பட்ஜெட்டில் சுமார் 335 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
என்எஸ்எஸ் பட்ஜெட் ஒதுக்கீடு 2022-23ல் ரூ.283.50 கோடியிலிருந்து 2023-24ல் ரூ.325 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மேலும் என்எஸ்எஸ் அலகுகளை உருவாக்க உதவும். அதேபோல், தேசிய விளையாட்டு கூட்டமைப்புக்கான நிதியுதவி ரூ.280 கோடியில் இருந்து ரூ.325 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர். மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு 3397 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இது 11 சதவீதம் அதிகம் ஆகும்.