'அசோக் கெலாட் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' - சச்சின் பைலட் போர்க்கொடி

கட்சி விரோத செயலுக்காக அசோக் கெலாட் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி உள்ளார்.

Update: 2022-11-02 23:21 GMT

ஜெய்ப்பூர்,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக்கெலாட் போட்டியிட விரும்பினார். ஒருவருக்கு ஒரு பதவி என்பதில் காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருப்பதால், அவர் கட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிட்டால், அங்கு முதல்-மந்திரியை மாற்றி விடலாம் என முடிவுக்கு வந்தது.

குறிப்பாக நீண்ட காலமாக அந்தப் பதவி மீது கண் வைத்துள்ள சச்சின் பைலட்டை முதல்-மந்திரி ஆக்க முடிவு எடுத்தது. இதற்காக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தி புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய மேலிடம் மல்லிகார்ஜூன கார்கேயையும், அஜய் மக்கானையும் ராஜஸ்தான் அனுப்பியது.

ஆனால் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க அசோக் கெலாட் முன்வரவில்லை. எனவே மேலிட முடிவுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியதுடன், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும் போட்டி கூட்டமும் நடத்தினர். இது கட்சி விரோத செயலுக்காக பார்க்கப்பட்டது.

நோட்டீஸ்

இதையொட்டி மந்திரிகள் சாந்தி தாரிவால், மகேஷ் ஜோஷி, ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் தர்மேந்திர ரத்தோர் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் மேலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால் அசோக் கெலாட், சோனியா காந்தியை சந்தித்து பேசி தனது ஆதரவாளர்களின் செயல்களுக்கு தார்மீகப்பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டதுடன், காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து பின்வாங்கினார். இத்துடன் இந்த விவகாரம் முடிவுக்கு வந்து விட்டது என கருதப்பட்டது. ஆனால் அது நீறுபூத்த நெருப்பாக தொடர்கிறது.

சச்சின் பைலட் போர்க்கொடி

இந்த விவகாரத்தில் இப்போது சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி உள்ளார். காங்கிரஸ் தலைமையின் முடிவுக்கு எதிராக செயல்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

கட்சி விரோத நடவடிக்கைக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் மீது கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள்தான் உள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் போன்று என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை விரைவாக எடுக்க வேண்டும்.

கட்சியின் சட்ட திட்டங்களும், விதிகளும் எல்லோருக்கும் ஒன்றுதான். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விரைவாக முடிவு எடுக்க வேண்டும்.

ஒரு நிகழ்ச்சியின்போது ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டை பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார். இதை எளிதாக எடுத்துக்கொண்டு விட முடியாது என்று அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் சச்சின் பைலட்டின் போர்க்கொடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்