பா.ஜனதாவை சேர்ந்தவர்: எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்கிறார், ஆயனூர் மஞ்சுநாத்

பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.சி. ஆயனூர் மஞ்சுநாத் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

Update: 2023-04-03 18:45 GMT

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பா.ஜனதா சார்பில் இன்னும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடவில்லை. இந்த நிலையில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் அரசியல் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சி தாவும் படலமும் ஜோராக நடந்து வருகிறது. கட்சிகளில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் ஒவ்வொருவராக விலகி வருகிறார்கள். அந்த வகையில் பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.சி.க்கள் புட்டண்ணா, பாபுராவ் சின்சனசூர் மற்றும் எம்.எல்.ஏ. என்.ஒய்.கோபாலகிருஷ்ணா, ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.சீனிவாஸ், ஏ.டி.ராமசாமி, சிவலிங்கேகவுடா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த மற்றொரு எம்.எல்.சி.யும் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

சிவமொக்காவை சேர்ந்தவர் ஆயனூர் மஞ்சுநாத். பா.ஜனதா எம்.எல்.சி.யான இவர், சிவமொக்கா நகர் தொகுதியில் தனக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று மேலிடத்தை கேட்டு வருகிறார். ஆனால் அவருக்கு டிக்கெட் கிடைக்காது என்றே தெரிகிறது. இதனால் தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார். ஆனால் அவர் எந்த கட்சியில் இணைய உள்ளார் என்பது தெரியவில்லை. மேலும் அவர் பா.ஜனதா எம்.எல்.ஏ. ஈசுவரப்பா மீது பரபரப்பு குற்றச்சாட்டையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'நான் இந்த முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். கட்சியிடமும் எனக்கு டிக்கெட் வழங்குமாறு கேட்டேன். எனக்கு டிக்கெட் கிடைப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதனால் எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். நான் ஏழைகளின் பிரதிநிதியாக ஈசுவரப்பாவை எதிர்த்து சிவமொக்காவில் போட்டியிடுவேன். ஈசுவரப்பாவின் மகன் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வருகிறது. சிவமொக்காவில் ரூ.4½ கோடி மதிப்பிலான சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவ்வளவு பெரிய வியாபாரம் சிவமொக்காவில் நடக்க வாய்ப்பு இல்லை. சிலர் (ஈசுவரப்பா) சட்டசபை தேர்தலில் போட்டியிட மக்களை கவர இதற்கு ஏற்பாடு செய்திருக்கலாம். ஈசுவரப்பாவுக்கு அதிகார மோகம் அதிகம். எடியூரப்பாவுடன் அவருக்கு நல்ல உறவு கிடையாது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்