எம்.எல்.ஏ. சீட் கொடுப்பதாக கூறி ரூ.5 கோடி மோசடி: மடாதிபதியிடம் தீவிர விசாரணை
எம்.எல்.ஏ. சீட் கொடுப்பதாக கூறி ரூ.5 கோடி மோசடி செய்த வழக்கில் கைதான மடாதிபதியை, விஜயநகரில் உள்ள மடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது.;
பெங்களூரு:-
மடாதிபதி கைது
உடுப்பி மாவட்டம் பைந்தூரை சேர்ந்த தொழில்அதிபர் கோவிந்தபாபு பூஜாரியிடம் எம்.எல்.ஏ. சீட் வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.5 கோடி மோசடி செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் கோவிந்தபாபுவிடம் ரூ.1½ கோடியை வாங்கியதாக மடாதிபதி அபினவ காலஸ்ரீ ஒடிசாவில் கைது செய்யப்பட்டு இருந்தார்.
அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார், காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், மடாதிபதி அபினவ காலஸ்ரீயை நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து விஜயநகர் மாவட்டம் ஹூவினகடஹள்ளியில் உள்ள மடத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். மடத்தில் வைத்தே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
வக்கீலுக்கு உத்தரவு
குறிப்பாக கோவிந்தபாபுவிடம் வாங்கிய ரூ.1½ கோடி எங்கே? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மைசூரு வக்கீலிடம் ரூ.60 லட்சம் கொடுத்திருப்பதாகவும், மீதி பணத்தில் நிலம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் வாங்க கொடுத்து விட்டதாகவும் போலீசாரிடம் மடாதிபதி கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, மடத்தில் இருந்த் சில சொத்து பத்திரங்கள் ஆவணங்களை போலீசார் கைப்பற்றினார்கள். மடாதிபதியின் வங்கி கணக்குகளையும் போலீசார் பரிசீலனை நடத்தி வருகிறார்கள்.
இதுதவிர மடாதிபதியின் வங்கி லாக்கர்களிலும் சோதனை நடத்தி சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் நேற்று முன்தினம் மைசூருவை சேர்ந்த வக்கீல் பிரணவ் பிரசாத் மடத்திற்கு வந்து ரூ.56 லட்சத்தை கொடுத்து விட்டு சென்றிருந்தார். இதையடுத்து, அவரிடம் ரூ.56 லட்சம் குறித்து விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டு இருந்தனர்.
ரூ.56 லட்சம் குறித்து விசாரணை
அதன்பேரில், பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேற்று பிரணவ் பிரசாத் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ரூ.56 லட்சம் குறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது மடாதிபதியின் கார் டிரைவர் தான் தன்னிடம் பணத்தை கொடுத்தாகவும், மோசடிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் கூறியதாக தெரிகிறது.
அதே நேரத்தில் எம்.எல்.ஏ. சீட் வாங்கி கொடுப்பது தொடர்பான மோசடி குறித்து தொலைகாட்சியில் பார்த்து அறிந்ததும், என்னிடம் இருந்த பணத்தை மடத்திற்கு சென்று ஒப்படைத்ததாகவும் பிரணவ் பிரசாத் கூறியுள்ளார். இதையடுத்து, மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டும் என்று கூறி பிரணவ் பிரசாத்தை போலீசார் அனுப்பி வைத்திருந்தார்கள்.
ரூ.2 கோடி பறிமுதல்
இந்த விவகாரம் குறித்து போலீஸ் கமிஷனர் தயானந்த் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், எம்.எல்.ஏ. சீட் வாங்கி கொடுப்பதாக கூறி தொழில்அதிபரிடம் ரூ.5 கோடி மோசடி செய்ததாக சைத்ரா குந்தாப்புரா, மடாதிபதி உள்பட 8 பேர் இதுவரை கைதாகி உள்ளனர். வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள், பின்னணியில் இருப்பவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. பல்வேறு கோணங்களில் இந்த விசாரணை நடக்கிறது. சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.
விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. கைதானவர்களிடம் இருந்து இதுவரை ரூ.2 கோடிக்கும் மேற்பட்ட நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதி பணத்தை மீட்கவும் நடவடிக்கையும் நடந்து வருகிறது என்றார்.