மிக்சி குண்டு வெடிப்பு வழக்கில் கைதான வாலிபர் பற்றி பரபரப்பு தகவல்கள்

மிக்சி குண்டு வெடிப்பு வழக்கில் கைதான வாலிபர், தன்னிடம் குவியல், குவியலாக பணம், தங்கம் இருப்பதாக கூறி பல பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது.;

Update: 2022-12-29 22:18 GMT

ஹாசன்:

மிக்சி குண்டு வெடிப்பு வழக்கில் கைதான வாலிபர், தன்னிடம் குவியல், குவியலாக பணம், தங்கம் இருப்பதாக கூறி பல பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது.

மிக்சி வெடித்தது

கர்நாடக மாநிலம் ஹாசன் டவுன் படாவனே போலீஸ் எல்லைக்குட்பட்ட குவெம்பு நகர் பகுதியில் டி.டி.டி.சி. கூரியர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த 26-ந்தேதி இரவு மிக்சி வெடித்து சிதறியது. இதில், கூரியர் அலுவலக உரிமையாளர் சசிக்குமார் படுகாயம் அடைந்தார். மிக்சி வெடித்த சம்பவம் குண்டுவெடிப்பாக இருக்குமோ என்று சந்தேகம் எழுந்தது. இதனால் வெடிகுண்டு நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் கூரியர் அலுவலகத்தில் சோதனை செய்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு பயங்கரவாத அமைப் பின் தொடர்பு இல்லை என்றும், முன்விரோதம் காரணமாக நடந்தது என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஹாசன் படாவனே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பெங்களூருவை சேர்ந்த அனூப் என்பவர் மிக்சியில் டெட்டனேட்டர் வைத்து அனுப்பியது தெரியவந்தது. அதாவது, ஹாசனை சேர்ந்த பெண்ணை பழிவாங்குவதற்காக அவர் மிக்சியில் டெட்டனேட்டர் வைத்து அனுப்பியதும், பார்சலில் அனுப்புனர் முகவரி இல்லாததால் அதனை ெபண் வாங்க மறுத்ததும், அலுவலகத்துக்கு திரும்பி கொண்டு வந்தபோது அந்த பார்சல் கீழே விழுந்து டெட்டனேட்டர் வெடித்ததும் தெரியவந்தது.

காதல்

இதையடுத்து போலீசார் பெங்களூருவை சேர்ந்த அனூப்பை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, ஏற்கனவே திருமணமாகி கணவனை பிரிந்த ஹாசனை சேர்ந்த பெண், 2-வது திருமணத்திற்காக ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் தனது விவரங்களை பதிவிட்டிருந்தார். அந்த திருமண தகவல் மையம் மூலம் அனூப்பிற்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அனூப் வலியுறுத்தி உள்ளார். ஆனால் அந்த பெண் திருமணத்துக்கு மறுத்ததாக தெரிகிறது. இதனால் அந்த பெண்ணை பழிவாங்க அனூப், மிக்சியில் டெட்டனேட்டர் வைத்து, திறந்ததும் வெடிக்கும் வகையில் வைத்து தனது முகவரியை குறிப்பிடாமல் அனுப்பி வைத்திருந்தார்.

ஆனால் அந்த பார்சலை அவர் வாங்க மறுத்ததால், கூரியர் அலுவலகத்தில் வைத்து எதிர்பாராதவிதமாக வெடித்துள்ளது.

பல பெண்களை ஏமாற்றி...

ஏற்கனவே திருமணமான அனூப், மேட்ரிமோனி மற்றும் சமூக வலைத்தளங்களில் திருமணமான பெண்களை குறிவைத்து தனது காதல் வலையில் விழ வைத்து வந்துள்ளார். அதற்காக அவர், தனது வீட்டில் மிக்சி, குக்கர் நிறைய குவியல், குவியலாக தங்கம் மற்றும் சூட்கேஸ் முழுவதும் கட்டுக்கட்டாக பணம் இருப்பது போன்றும், பண்ணை தோட்டம் இருப்பது போன்றும் வீடியோக்களை பெண்களுக்கு அனுப்பி, தான் வசதி படைத்தவன் என்பது போல் காண்பிப்பார். அதனை நம்பி அவரது வலையில் விழும் பெண்களை ஏமாற்றி நகை, பணத்தை அனூப் பறித்து வந்துள்ளார்.

இதேபோல், அவர் பல பெண்களை ஏமாற்றி நகை, பணத்தை பறித்ததும் தெரியவந்துள்ளது. பெண்களை ஏமாற்றுவற்காக அவர் தன்னை வசதி படைத்தவன் என்பதை காட்டுவதற்காக தனது வீட்டில் மிக்சி, குக்கரின் தங்க நகைகள், சூட்கேசில் பணம் இருப்பது போன்றும், பண்ணை தோட்டம் இருப்பது போன்றும் போலியான வீடியோக்களை தயார் செய்ததும் தெரியவந்தது. அனூப்பின் சுயரூபம் தெரிந்ததால் தான் ஹாசனை சேர்ந்த பெண், அவரை விட்டு விலகி சென்றுள்ளார். இதனால் அவரை தீர்த்துக்கட்டவே மிக்சியில் டெட்டனேட்டர் வைத்து அனுப்பி வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அனூப்பிடம் ஏமாந்த பெண்கள் யார், எத்தனை பெண்கள் ஏமாந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்