புனித பயணம் சென்ற சிறுமியை மறித்து, முத்தம்... வாலிபர் வெறிச்செயல்; வைரலான வீடியோ
உத்தர பிரதேசத்தில் பொதுவெளியில் சிறுமியை மறித்து, வாயில் வாலிபர் முத்தம் கொடுத்த சம்பவம் வைரலான நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.;
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி நடந்து வருகிறது. பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல், கடத்தல், மிரட்டல் போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதேபோன்று, குற்றவாளிகள் சட்ட அத்துமீறலில் ஈடுபடும்போது, புல்டோசர் கொண்டு வீடுகளை இடிக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. இந்நிலையில், மதுரா நகரில் சாலையில் டீன்ஏஜ் சிறுமி, கையில் குழந்தையுடன் நடந்து செல்கிறார்.
அப்போது, பின்னால் தொடர்ந்து வரும் வாலிபர் அந்த சிறுமியை மறித்து, நெருங்கி சென்று வாயில் முத்தம் கொடுத்து விட்டு, ஒன்றும் நடக்காததுபோல் வந்த வழியே நடந்து செல்கிறார். இந்த வீடியோ வெளிவந்து வைரலானது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை சீர்கெட்டு உள்ளது என குற்றச்சாட்டு கூறியுள்ளது. இதுபற்றி எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த சிறுமி, மதுராவில் மதம் சார்ந்த புனித பயணம் மேற்கொண்டார்.
அப்போது, திறந்த வெளியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பயங்கரம் நடந்துள்ளது. பா.ஜ.க.வுக்கான உத்தர பிரதேசத்தில், பெண்களுக்கான மதிப்பு இந்த அளவிலா? உள்ளது என கேள்வி எழுப்பி உள்ளது.
அந்த வீடியோவில், வெள்ளை நிற சட்டை மற்றும் டெனிம் பேண்ட் அணிந்த, தலையில் தொப்பியுடன் வந்த வாலிபர் ஒருவர், டீன்ஏஜ் சிறுமியை வழிமறிக்கிறார். பின்பு, வலுக்கட்டாயப்படுத்தி, சிறுமியை பிடித்து, முத்தம் கொடுத்து விட்டு செல்கிறார். சிறுமியும் தொடர்ந்து நடந்து செல்கிறார்.
இதுபற்றி யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை. எனினும், பஞ்சாயத்து ஒன்று நடந்துள்ளது என கூறப்படுகிறது. குற்றவாளிகளின் ஆட்சியின் கீழ் கொடூரத்தின் உண்மை நிலை இதுவாக உள்ளது. மோடியின் உத்தரவாதம் என்றால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? என அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இதுபோன்று வெளியான மற்றொரு வீடியோவில், இந்த செயலுக்கு தண்டனையாக அந்த வாலிபர், காலணிகளை கொண்டு அவருடைய தலையில் அவரே அடித்து கொள்ளும் காட்சி இடம் பெற்று உள்ளது. அவர் கூப்பிய கரங்களுடன் மன்னிப்பும் கோருகிறார். இதுபற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
சமீபத்தில், மேற்கு வங்காளத்தில் மால்டாகா உத்தர் தொகுதியின் வேட்பாளர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யாக உள்ள காகென் முர்மு வாக்கு கேட்டு வீடு, வீடாக சென்றார். அவர் தேர்தல் பிரசாரத்தின்போது, ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுபற்றி திரிணாமுல் காங்கிரசார் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பெண்களுக்கு எதிராக பா.ஜ.க. தலைவர்கள் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். நீங்கள் பார்த்த விசயங்களை உங்களால் நம்ப முடியவில்லை என்றால், நாங்கள் அதனை விளக்குகிறோம்.
இதுபற்றி எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்த எம்.பி.க்கள் முதல், வங்காள பெண்களுக்கு எதிரான ஆபாச பாடல்கள் பாடுவது என பெண்களுக்கு எதிரான அரசியல்வாதிகள் பா.ஜ.க.வில் உள்ளனர் என்றும் தெரிவித்திருக்கிறது.
இதுவே மோடியின் குடும்பத்தினர், பெண்களுக்கு ஆற்றக்கூடிய விசயம் ஆகும். ஆட்சிக்கு வந்து விட்டால் அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்? என கற்பனை செய்து பாருங்கள் என்றும் தெரிவித்து இருந்தது.
நாட்டுக்கு பதக்கங்களை பெற்று தந்த மல்யுத்த வீராங்கனைகள், பா.ஜ.க. எம்.பி. மற்றும் மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதனை குறிப்பிட்டும், மற்றும் அசன்சோல் தொகுதியின் முன்னாள் பா.ஜ.க. வேட்பாளரான பவன் சிங்கை நேரடியாக குறிப்பிட்டும் திரிணாமுல் காங்கிரசார் குற்றச்சாட்டை கூறியுள்ளனர். பவன் சிங் தேர்தலுக்கான போட்டியில் இருந்து வெளியேறி விட்டார்.
இதுநடந்து சில நாட்களுக்குள் பா.ஜ.க. ஆட்சி நடத்தும் உத்தர பிரதேசத்தில் சிறுமிக்கு வாலிபர் பொதுவெளியில் அத்துமீறி, முத்தம் கொடுத்து, நடந்து சென்ற சம்பவம் மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.