20 ஆண்டுகளுக்கு முன் மாயமான தாயை யு-டியூப் மூலம் கண்டுபிடித்த மும்பை பெண்..!

20 ஆண்டுகளுக்கு முன் மாயமான தாயை யு-டியூப் மூலம் மும்பையை சேர்ந்த பெண் கண்டுபிடித்து உள்ளார்.

Update: 2022-08-01 16:26 GMT

மும்பை,

மும்பையை சேர்ந்தவர் ஹமிதா பானு. இவரை கடந்த 2002-ம் ஆண்டு துபாயிக்கு வீட்டு வேலைக்கு அனுப்புவதாக ஏஜென்ட் ஒருவர் கூறினார். இதை நம்பி அவரும் சென்றார். ஆனால் ஏஜென்ட் அவரை துபாய்க்கு அனுப்பாமல், பாகிஸ்தானுக்கு அனுப்பினார். அங்கு சென்ற பிறகு ஹமிதா பானுவால் குடும்பத்தினர் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து அவர் பாகிஸ்தான் சிந்து மகாணத்தில் உள்ள ஐதாராபத் பகுதியில் வசிக்க தொடங்கினார். மேலும் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரை திருமணமும் செய்து கொண்டார். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஹமிதா பானுவின் கணவர் உயிரிழந்தார். சமீபத்தில் 70 வயதான ஹமிதா பானுவுக்கு சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்ற ஏக்கம் ஏற்பட்டது. மேலும் மும்பையில் உள்ள மகள் உள்ளிட்ட குடும்பத்தினரை பார்க்க வேண்டும் எனவும் விரும்பினார்.

இதுகுறித்து அவர் அந்த பகுதியை சேர்ந்த வாலியுல்லா மரூப் என்பவரிடம் கூறினார். வாலியுல்ல மரூப், ஹமித பானுவின் கதையை வீடியோவாக யூ-டியூப்பில் பதிவேற்றினார். மேலும் மும்பையில் உள்ள சமூக ஆர்வலர்கள் அந்த வீடியோவை பார்த்தால் ஹமிதா பானுவுக்கு உதவுமாறு கேட்டு கொண்டார். அந்த வீடியோ மும்பையை சேர்ந்த காப்லான் சேக் என்பவர் பார்த்து உள்ளார். மேலும் அவர் மும்பையில் உள்ள குழுவில் அந்த வீடியோவை பகிர்ந்தார்.

இதன் மூலம் ஹமீதா பானுவின் மகன் யாஸ்மீன் பஷிர் சேக் குர்லா பகுதியில் வசித்துவருவது கண்டுபிடிக்கப்பட்டது.20 ஆண்டுகளுக்கு பிறகு தன் தாயின் இருப்பிடம் தெரிந்தது குறித்து யாஸ்மீன் கூறுகையில், " எனது தாய் 2002-ம் ஆண்டு ஏஜென்ட் மூலமாக துபாய்க்கு வேலைக்கு சென்றார். எனினும் ஏஜென்டின் தவறால் எனது தாய் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு அவரை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போது எனது தாய் உயிருடன் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சியாக உள்ளோம். அவரை மும்பை அழைத்து வர இந்திய அரசிடம் உதவி கேட்க உள்ளோம். " என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்