சிவமொக்கா அருகே ஒரு வாரத்தில் எருமை மாடு 2 குட்டிகளை ஈன்ற அதிசயம்

சிவமொக்கா அருகே ஒரு வாரத்தில் எருமை மாடு 2 குட்டிகளை ஈன்ற அதிசயம் நடந்துள்ளது.

Update: 2022-09-20 18:45 GMT

சிவமொக்கா:

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா நட்கலசி கிராமத்தை சேர்ந்தவர் துர்கப்பா. விவசாயி. இவர் தனது வீட்டில் எருமை மாடு வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த எருமை மாடு சினை ஆனது. கடந்த 13-ந்தேதி எருமை மாடு ஒரு குட்டியை ஈன்றது. அது ஆண் கன்று ஆகும். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே எருமை மாடு மற்றொரு கன்றுக்குட்டியை ஈன்றது. அது பெண் கன்று ஆகும். ஒரே வாரத்தில் 2 கன்றுகளை எருமைமாடு ஈன்றது அறிந்ததும் கால்நடை மருத்துவர் லட்சுமி துர்கப்பா வீட்டுக்கு சென்று பசுமாட்டையும், கன்றுக்குட்டிகளையும் பரிசோதித்தார். தாயும், கன்றுகளும் நலமாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் ஒரே வாரத்தில் 2 கன்றுகளை எருமை ஈன்ற அதிசயம் குறித்து மருத்துவர் லட்சுமி கூறுகையில், பெண்களுக்கு சிலருக்கு 2 கருப்பை இருக்கும். அதுபோல் இந்த மாட்டிற்கு இரு கருப்பை உருவாகியுள்ளது. வெவ்வேறு காலத்தில் கரு உருவாகியுள்ளது. இதனால் சினையான மாடு முதலில் ஒரு கன்றையும் ஒரு வாரத்தில் 2-வது கன்றையும் ஈன்றுள்ளது. இந்த அதிசயம் எப்போதாவது தான் நிகழும். அது தற்போது அரங்கேறியுள்ளது என்றார்.

இதுகுறித்து துர்கப்பா கூறுகையில், இதே எருமை முதலில் பெண் கன்றை ஈன்றது. தற்போது இரட்டை கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது. இதில் ஒரு பெண், ஒரு ஆண் கன்றுக்குட்டிகள் அடங்கும். இயற்கையான முறையிலேயே மாடு குட்டிகளை ஈன்றுள்ளது. இது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். ஒரே வாரத்தில் 2 குட்டிகளை ஈன்ற மாட்டையும், கன்றுகளையும் பார்க்க சுற்றுவட்டார மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்