ஆதார் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? நகல் வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு
எந்த நிறுவனங்களுக்கும் ஆதார் நகல் வழங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு ஆதார் அமைப்பு விடுத்த எச்சரிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது.;
புதுடெல்லி,
எந்த நிறுவனங்களுக்கும் ஆதார் நகல் வழங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு ஆதார் அமைப்பு விடுத்த எச்சரிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது.
எந்த நிறுவனங்களுக்கும் ஆதார் நகல் வழங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு ஆதார் அமைப்பு விடுத்த எச்சரிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது.
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பிரத்யேக எண்களுடன் கூடிய ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக குடிமக்களின் விரல் ரேகை, கண் விழித்திரை அடையாளம் ேபான்றவை சேகரிக்கப்படுகின்றன.
தனிநபர்களின் இத்தகைய அந்தரங்க அம்சங்களுடன் வழங்கப்படும் ஆதார் அட்டை இன்று அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு சேவைகளை பெறுவதற்கு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
இதற்காக பொதுமக்களிடம் இருந்து ஆதார் நகல்களை அந்தந்த நிறுவனங்கள் பெற்று வருகின்றன.
ஆனால் ஆதார் நகல்களை எந்தவொரு நிறுவனத்துக்கும் வழங்குவது ஆபத்தானது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (அதார் அமைப்பு) எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த அமைப்பின் பெங்களூரு பிராந்திய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் இது கூறப்பட்டு இருந்தது.
அதில், 'ஆதார் நகல்கள் தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் எந்தவொரு நிறுவனத்துக்கும் அவற்றை வழங்க வேண்டாம். கட்டாயம் வழங்க வேண்டியபட்சத்தில், ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை தவிர மீதமுள்ள எண்கள் மறைக்கப்பட்ட நகல்களை வழங்கலாம். இதை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்' என்று கூறப்பட்டு இருந்தது.
மேலும், ஆதார் அட்டையைப் பாதுகாப்பு இல்லாத கம்ப்யூட்டர் மூலமாக பதிவிறக்கம் செய்ய வேண்டாம் எனவும், கம்ப்யூட்டர் மையங்களில் பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது.
அதேநேரம், கம்ப்யூட்டர் மையங்கள் மூலம் பதிவிறக்கம் செய்தால், கம்ப்யூட்டரில் இருந்து அந்த நகலை முழுவதுமாக நீக்குமாறு கேட்டு, அதை உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
ஆதார் அமைப்பின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. மக்களின் அன்றாட சேவைகளுக்கு எல்லாம் ஆதார் கட்டாயமாகி வரும் நிலையில், அரசின் இந்த அறிவிப்பு பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
இதைத்தொடர்ந்து ஆதார் அமைப்பின் இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. இது தொடர்பாக மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆதார் நகல்கள் தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருப்பதால் எந்தவொரு நிறுவனத்துக்கும் ஆதார் நகல் வழங்குவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த செய்தி தவறான புரிதலுக்கு வழி வகுக்கும் என்பதை கருத்தில் கொண்டு, அது உடனடியாக திரும்ப பெறப்படுகிறது.
ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்களைப் பயன்படுத்துவதிலும், பகிர்வதிலும் வழக்கமான விவேகத்துடன் மட்டுமே செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆதார் அட்டைதாரர்களின் தனியுரிமையை பாதுகாப்பதற்கு போதுமான அம்சங்களை ஆதார் அடையாள அங்கீகார சூழியல் அமைப்பு வழங்கி உள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.