சாலைகளை ஆக்கிரமித்து தவறாக நிறுத்திய வாகனத்தை படம் எடுத்து அனுப்பினால் பரிசு..!! - விரைவில் சட்டம்

சாலைகளை ஆக்கிரமித்து தவறாக நிறுத்திய வாகனத்தை படம் எடுத்து அனுப்பினால் பரிசு என்று விரைவில் சட்டம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-16 22:24 GMT

புதுடெல்லி,

வாகனங்கள் வைத்திருப்போர் அவற்றை நிறுத்தி வைப்பதற்கான இடங்களை உருவாக்கிக்கொள்ளாமல், சாலைகளை, தெருக்களை ஆக்கிரமித்து அவற்றை தவறாக நிறுத்துகிறபோது அது போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படி தவறாக நிறுத்துகிற வாகனங்களை படம் எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க சட்டம் வரப்போகிறது.

இதுபற்றி டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி பேசுகையில், "நான் ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்போகிறேன். தவறாக நிறுத்திய வாகனங்களை படம் எடுத்து அனுப்புகிறபோது, அந்த குற்றத்துக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கிறபோது, படம் எடுத்து அனுப்பியவருக்கு ரூ.500 பரிசாக வழங்கப்படும். அப்போது வாகனங்களை தவறாக நிறுத்தும் பிரச்சினை முடிவுக்கு வந்து விடும்" என குறிப்பிட்டார்.

வாகனங்களை நிறுத்துவதற்கு மக்கள் இடம் ஏற்படுத்திக்கொள்ளாமல், தங்களது வாகனங்கள் சாலைகளை ஆக்கிரமிக்க வைத்து விடுகின்றனர் என அவர் வருத்தம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்