மீலாது நபி பண்டிகையை அமைதியாக கொண்டாட வேண்டும் மந்திரி மது பங்காரப்பா வேண்டுகோள்
சிவமொக்காவில் விநாயகர் சதுர்த்தி, மீலாது நபி பண்டிகையை பொதுமக்கள் அமைதியாக கொண்டாட வேண்டும் என மந்திரி மது பங்காரப்பா கூறினார்.;
சிவமொக்கா-
சிவமொக்காவில் விநாயகர் சதுர்த்தி, மீலாது நபி பண்டிகையை பொதுமக்கள் அமைதியாக கொண்டாட வேண்டும் என மந்திரி மது பங்காரப்பா கூறினார்.
ஆலோசனை கூட்டம்
நாடு முழுவதும் வருகிற 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலமும், மீலாது நபி பண்டிகை ஊர்வலமும் ஒரே நாளில் வருகிறது. இதனால் இரு பிரிவினரையும் அழைத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவமொக்கா மாவட்ட கலெக்டர் செல்வமணி ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அதில், விநாயகர் சதுர்த்தி, மீலாது நபி பண்டிகை அமைதியாக கொண்டாட அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர், அவர்களிடம் கேட்டு கொண்டார். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் மாலை சிவமொக்கா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மதநல்லிணக்க தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மந்திரி தலைமை தாங்கினார்
இந்த கூட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா தலைமை தாங்கினார். இதில், சிவமொக்கா தொகுதி எம்.எல்.ஏ. சன்னபசப்பா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மந்திரி மது பங்காரப்பா பேசுகையில், இந்த ஆண்டு வருகிற 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்கிறது. அதேநாளில் மீலாது நபி பண்டிகை மற்றும் ஊர்வலம் நடக்கிறது.
இதனால் இரு சமூகத்தினரும் ஒற்றுமையுடன் அமைதியான முறையில் பண்டிகையை கொண்டாட வேண்டும். இந்த விழாக்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற கூடாது. எந்த விழா நடந்தாலும், மக்களுக்கு மகிழ்ச்சி தரவேண்டும். அந்தநாளை துன்ப நாளாக மாற்ற கூடாது, என்றார்.
சிலைகள் வைக்க அனுமதி
இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் பேசுகையில், சிவமொக்கா மாவட்டத்தில் இந்த ஆண்டும் வழக்கம் போல விநாயகர் சிலைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
சிலைகள் வைக்க அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் அனுமதி பெற வேண்டும். அரசு நெறிமுறைகளை பின்பற்றி விழா குழுவினர் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும்.
இதனை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பதற்றமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு ஏதும் ஏற்பட்டால் பொதுமக்கள் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார்.