மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்
தாய்-குழந்தை பலியான விவகாரத்தில் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு கோவிந்தபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எச்.பி.ஆர். லே-அவுட்டில் கடந்த வாரம் மெட்ரோ ரெயில் தூணுக்கான இரும்பு கம்பிகள் சரிந்து விழுந்ததில் தாய், குழந்தை பலியாகி இருந்தார்கள். இந்த சம்பவம் குறித்து கோவிந்தபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தனியார் கட்டுமான நிறுவனம், மெட்ரோ ரெயில் நிர்வாக என்ஜினீயர்கள், மேற்பார்வையாளர்கள் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த ஐ.ஐ.டி.யை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு பெங்களூருவுக்கு வந்து விபத்து நடந்த பகுதியை ஆய்வு நடத்திவிட்டு சென்றுள்ளனர். முதற்கட்டமாக என்ஜினீயர்களின் அலட்சியம் காரணமாக மெட்ரோ ரெயில் தூணுக்கான இரும்பு கம்பிகள் சரிந்து விழுந்ததால், விபத்து நடந்து தாய், குழந்தை பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பெங்களூரு மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் அஞ்சும் பர்வேசுக்கும் கோவிந்தபுரா போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர். அதாவது இரும்பு கம்பிகள் சரிந்து விழுந்தது குறித்து விசாரணைக்கு ஆஜராகி தகவல் தெரிவிக்கும்படி போலீசார் அந்த நோட்டீசில் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் உடல் நலக்குறைவை காரணம் காட்டி அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் ஆஜராகலாம் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அஞ்சும் பர்வேஸ் போன்று மெட்ரோ ரெயில் நிர்வாகத்தில் பணியாற்றும் மேலும் 15 அதிகாரிகளையும் விசாரணைக்கு ஆஜராகும்படி கோரி கோவிந்தபுரா போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர்.