போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்திய எம்.இ.எஸ். அமைப்பினர் 50 பேர் கைது

மகாமேளா நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்திய எம்.இ.எஸ். அமைப்பினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். பெலகாவியில் நுழைய முயன்ற சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தடுத்து நிறுத்தினர்.;

Update: 2022-12-19 21:36 GMT

பெலகாவி:

பெலகாவி பிரச்சினை

கர்நாடகம்-மராட்டியம் இடையே பெலகாவி யாருக்கும் என்பது தொடர்பாக நீண்டகாலமாக எல்லை பிரச்சினை உள்ளது. பெலகாவி தங்களுக்கு சொந்தமானது என்று மராட்டிய அரசு கூறி வருகிறது. ஆனால் பெலகாவி, கர்நாடகத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், எக்காரணத்தை கொண்டும் பெலகாவியை விட்டு கொடுக்க மாட்டோம் என்றும் கர்நாடகம் கூறி வருகிறது.

இந்த நிலையில் பெலகாவி கர்நாடகத்துக்கு சொந்தமானது என்று கூறும் வகையில், குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்த போது கடந்த 2006-ம் ஆண்டு பெலகாவியில் சுவர்ண விதான சவுதா கட்டப்பட்டது. அங்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் குளிர்கால கூட்டத்தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் பெலகாவியில் சுவர்ண விதான சவுதாவை கட்டியதை கண்டித்தும், அங்கு குளிர்கால கூட்டத்தொடர் நடத்த எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த 2006-ம் ஆண்டு முதல் குளிர்கால கூட்டத்தொடர் நடக்கும் போது எம்.இ.எஸ். அமைப்பினர் மகா மேளா என்ற பெயரில் கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மகாமேளா நடத்த அனுமதி மறுப்பு

இந்த நிலையில் பெலகாவி சுவர்ண விதான சவுதாவில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெலகாவி அருகே திலக்வாடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வேக்சின் டெப்போ என்ற இடத்தில் வைத்து மகா மேளா நடத்த அனுமதிக்கும்படி திலக்வாடி போலீசாரிடம், எம்.இ.எஸ். அமைப்பினர் மனு கொடுத்து இருந்தனர். மேலும் நேற்று மகாமேளா நடத்துவதற்கான ஏற்பாடுகளை எம்.இ.எஸ். அமைப்பினர் செய்து வந்தனர்.

ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் மகா மேளா நடத்த திலக்வாடி போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும் வேக்சின் டெப்போ பகுதியை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு போலீசார் 144 தடை உத்தரவும் பிறப்பித்தனர். இதனால் நேற்று மகா மேளா நிகழ்ச்சி நடத்த முடியாமல் போனது.

எல்லையில் தடுத்து நிறுத்தம்

இந்த நிலையில் மகா மேளா நடத்த அனுமதி மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திலக்வாடி போலீஸ் நிலையம் முன்பு எம்.இ.எஸ். அமைப்பினர் நேற்று காலை போராட்டம் நடத்த முயன்றனர். இதனால் எம்.இ.எஸ். அமைப்பின் தலைவர்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மகா மேளா நடத்த அனுமதி மறுக்கப்பட்டது பற்றியும், எம்.இ.எஸ். அமைப்பினர் கைது செய்யப்பட்டது பற்றியும் அறிந்ததும் மராட்டியத்தில் இருந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், எம்.இ.எஸ். அமைப்பினர் என 500-க்கும் மேற்பட்டோர் பேரணியாக கர்நாடகம் நோக்கி வந்தனர்.

அவர்கள் பெலகாவி மாவட்டம் நிப்பானியில் உள்ள எல்லை வழியாக கர்நாடகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை இரும்பு தடுப்பு கம்பி அமைத்து கர்நாடக போலீசார் எல்லையில் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் மராட்டியத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க வேக்சின் டெப்போ பகுதியில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 2006-ம் ஆண்டு முதல் கடந்த 2021-ம் ஆண்டு வரை 16 ஆண்டுகள் நடந்து வந்த நிலையில் இந்த ஆண்டு மகா மேளா நடத்த அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மகா மேளா நடத்தினால் நடவடிக்கை

மகா மேளாவுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து கர்நாடக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வேக்சின் டெப்போ பகுதியில் மகா மேளா நடத்த அனுமதிக்கும்படி எம்.இ.எஸ். அமைப்பினர் திலக்வாடி போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்து இருந்தனர். ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி திலக்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகா மேளா நடத்த அனுமதி மறுத்து உள்ளார். இதையும் மீறி மகா மேளா நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேக்சின் டெப்போவை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் கூட்டமோ, பேரணி, ஊர்வலமோ நடத்த அனுமதி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்