சொகுசு கார் மோதி 2 பேர் பலி; ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து போலீசில் சரணடைந்த பெண்
பெண் ஓட்டிய சொகுசு கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் ராம்குலா மேம்பாலத்தில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி விபத்து ஏற்பட்டது. அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதி பைக்கில் பயணம் செய்த முகமது ஹுசேன், முகமது அதீப் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
சொகுசு காரை ரித்திகா என்ற பெண் ஓட்டியுள்ளார். மேலும், அவர் மதுபோதையில் இருந்துள்ளார். அதேவேளை, விபத்தை ஏற்படுத்திய ரித்திகா கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு கீழமை கோர்ட்டு உடனடியாக ஜாமீன் வழங்கியது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து, ரித்திகாவை மீண்டும் கைது செய்ய அனுமதிக்கும்படி போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதனால், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தனக்கு ஜாமீன் வழங்கும்படி ரித்திகா மும்பை ஐகோர்ட்டு நாக்பூர் கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, ரித்திகாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
இந்நிலையில், நாக்பூர் கோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்ததையடுத்து விபத்து வழக்கில் ரித்திகா நேற்று போலீசில் சரணடைந்தார். சரணடைந்த ரித்திகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.