கல்வி, பணி இடங்களில் மகளிருக்கு மாதவிடாய் கால விடுமுறை..? மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்

நாடு முழுவதும் கல்வி, பணிபுரியும் இடங்களில் மகளிருக்கு மாதவிடாய் கால விடுமுறை அளிக்க கோரி தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணை செய்ய ஒப்பு கொண்டு உள்ளது.;

Update: 2023-02-15 10:15 GMT



புதுடெல்லி,


சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை கவனத்தில் கொண்டு விடுமுறை அளிப்பதற்கான விதிமுறைகளை வகுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு உள்ளது. தாய்மைகால பலன்களுக்கான சட்டத்தின் பிரிவு 14-ஐ அமல்படுத்தும்படியும் அதில் கோரப்பட்டு உள்ளது.

இதன்படி, சட்ட பிரிவுகளை கட்டாயப்படுத்த ஆய்வாளர்களை நியமிக்க அந்த பிரிவு கோருகிறது. இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணை செய்ய தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று ஒப்பு கொண்டு உள்ளார்.

அந்த மனுவில், ஐவிபானன், ஜொமேட்டோ, பைஜூஸ் மற்றும் ஸ்விக்கி உள்ளிட்ட சில நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிட்டு, அவை மாதவிடாய் கால விடுமுறைகளை வழங்குகிறது என்றும் குறிப்பிட்டு உள்ளது.

நாட்டில் 1992-ம் ஆண்டு கொள்கையின்படி, சிறப்பு மாதவிடாய் கால விடுமுறை வழங்கும் ஒரே மாநிலம் பீகார் ஆகும். இதன் முக்கியத்துவ விசயங்களை கவனத்தில் கொண்டு, மேகாலயாவில் இதுபோன்ற அதிகாரிகளை நியமிக்கும்படி 2014-ம் ஆண்டில் அரசு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த காலகட்டத்தின்போது, மன மற்றும் உடல்நல பாதிப்புகளை பெண் பெருமளவில் எதிர்கொள்கிறாள். அப்போது, வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு வகையில் நடத்தப்படுகிறாள். ஆனால், இந்தியாவில் ஒரே குடியுரிமை பெற்ற பெண்கள் சமத்துவத்துடன் நடத்தப்படுவதுடன், சம உரிமைகளையும் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

இந்த விடுமுறையை அளிக்க மாநிலங்கள் மறுப்பது என்பது அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவை மீறும் செயலாகும் என்றும் மனு தெரிவிக்கின்றது.

எடுத்துக்காட்டாக இங்கிலாந்து, சீனா, ஜப்பான், தைவான், இந்தோனேசியா, தென்கொரியா, ஸ்பெயின் மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளில் மாதவிடாய் கால விடுமுறை வழங்கப்படுகிறது என்றும் மனு குறிப்பிடுகிறது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் பிப்ரவரி 24-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்