மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 5 லட்சம் பேருக்கு வேலை; மேகாலயாவில் ஆளும் கட்சி தேர்தல் வாக்குறுதி

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 5 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என்று மேகாலயாவில் ஆளும் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

Update: 2023-02-04 17:23 GMT

மேகாலயா சட்டசபை தேர்தல்

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதல்-மந்திரி கான்ராட் சங்மா தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு 60 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு 27-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அங்கு தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. இந்த நிலையில், தலைநகர் ஷில்லாங்கில் ஆளும் தேசிய மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை முதல்-மந்திரி கான்ராட் சங்மா வெளியிட்டார்.

5 லட்சம் பேருக்கு வேலை

அதில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 5 லட்சம் பேருக்கு வேலை அளிப்போம்.

* தொழில்முனைவோர், சுற்றுலா, வேளாண் பதனிடுதல், அறிவுசார்/டிஜிட்டல் துறைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

* பல துறை திறன் பூங்காக்கள், பயணங்கள் மற்றும் வாழ்வாதாரத் துறைகளை உருவாக்குவதன் மூலம் இளைஞர்களின் திறன் மேம்படுத்தப்படும்.

* விளையாட்டு துறையில் அடிமட்ட அளவில் உலகத்தரம் வாய்ந்த வசதிகள் ஏற்படுத்தித்தரப்படும். இதன் வாயிலாக விளையாட்டுத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு, பயன்படுத்தப்படுவார்கள்.

முதல்-மந்திரி வசதி மையங்கள்

* ஒவ்வொரு கிராமத்திற்கும் அரசாங்க சேவைகளை வழங்க 1,000 முதல்-மந்திரி வசதி மையங்கள் உருவாக்கப்படும். அவற்றின்மூலம் கிராம சமூக பணியாளர்களை ஈடுபடுத்தி, கடைக்கோடி பகுதி வரையில் சேவைகள் வழங்கப்படும்.

* சிறப்புத் திட்டங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கப்படும். 'மிஷன் லாகாடாங்' திட்டத்தின் வாயிலாக இதுவரை 13 ஆயிரம் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்.

* புதிய சாலைகள் அமைக்கப்படும். கிராமங்களில் இணைப்பு வசதி ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்