மேகாலயாவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் 117 பன்றிகள் பலி
மேகாலயா மாநிலத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் காரணமாக 117 பன்றிகள் உயிரிழந்தன.
ஷில்லாங்,
மேகாலயா மாநிலத்தில் கடந்த மாதம், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தோன்றியிருப்பதாக அந்த மாநில கால்நடைத் துறை அறிவித்தது. மேலும், தொற்றிப் பரவக்கூடிய நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டத்தின்கீழ், பாதிக்கப்பட்ட கிராமங்களிலும், அவற்றைச் சுற்றியுள்ள 10 கி.மீ. தூரத்துக்குள்ளும் பன்றிகளை வெட்டவும், எடுத்துச் செல்லவும், விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் மாநிலத்தின் 4 மாவட்டங்களில் உள்ள 11 கிராமங்களில் கடந்த மாதம் முதல் 117 பன்றிகள் இறந்துள்ளன. அவற்றில் நடத்தப்பட்ட சோதனையில், அவை ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது என மேகாலயா கால்நடைத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த மாநிலத்தில் சுமார் 3.85 லட்சம் பன்றிகள் உள்ளன.