மேகதாது அணை விவகாரம்: மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லை - வைகோவுக்கு மத்திய மந்திரி பதில்

மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால், மேகதாது விவகாரம் தொடர்பான விவாதம் நடைபெறவில்லை என மத்திய மந்திரி பிஷ்வேஸ்வர் டூடு தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-22 00:21 GMT

புதுடெல்லி,

மாநிலங்களவையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கர்நாடக மாநில அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய நீர் ஆணையம் அல்லது சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதா? என்றும், இந்த திட்டத்தை தொடர வேண்டாம் என்று கர்நாடக அரசை மத்திய அரசு கேட்டுக்கொள்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு ஜல் சக்தித்துறை இணை மந்திரி பிஷ்வேஸ்வர் டூடு பதில் அளித்து கூறியதாவது:-

"மேகதாது சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை, கர்நாடக அரசால் கடந்த 2019 ஜனவரியில் மத்திய நதிநீர் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் விரிவான திட்ட அறிக்கையின் நகல்கள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பல்வேறு கூட்டங்களின்போது, மேகதாது சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை மீதான விவாதம் ஒரு நிகழ்ச்சி நிரலாக சேர்க்கப்பட்டது. இருப்பினும் மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால், இந்த நிகழ்ச்சி நிரல் மீதான விவாதம் நடைபெறவில்லை."

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்