கலபுரகியில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் மெகா ஜவுளி பூங்கா
கலபுரகியில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் மெகா ஜவுளி பூங்காவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்.;
பெங்களூரு:-
நல்ல வாழ்க்கை
மத்திய அரசின் ஜவுளித்துறை மற்றும் கர்நாடக கைத்தறி-ஜவுளித்துறை ஆகியவை சார்பில் ஜவுளி பூங்கா தொடக்க விழா நேற்று கலபுரகியில் நடைபெற்றது. இதில் இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த ஜவுளி பூங்காவை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கலபுரகி பிற்படுத்தப்பட்ட பகுதி. வேலை தேடி இங்கிருந்து பெங்களூரு, மும்பைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகம். அங்கு குழந்தைகளுடன் கட்டுமான பணிகளில் ஈடுபடுவதை நான் பார்த்துள்ளேன். இதில் இருந்து அவர்களை காப்பாற்றி அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுப்பது என்பது சவாலான பணியாக உள்ளது. இங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு மெகா ஜவுளி பூங்கா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடுகள் கிடைக்க உள்ளன.
ஊக்கத்தொகை
இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொருக்கும் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இங்கு தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு தண்ணீர், மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. 1,000 ஏக்கர் நிலம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்பு பழைய கொள்கையால், இருந்த சில நிறுவனங்களும் மூடப்பட்டன. ஆனால் நாங்கள் புதிய கொள்கையை உருவாக்கியுள்ளோம்.
மேலும் மத்தியிலும், மாநிலத்திலும் இரட்டை என்ஜின் அரசு உள்ளதால், அனைத்து திட்டங்களும் நமக்கு கிடைக்கின்றன. அடுத்த 10 ஆண்டுகளில் கலபுரகி நாட்டின் முக்கியமான நகரங்களில் ஒன்றாக மாறும். ராய்ச்சூர், விஜயாப்புராவிலும் இத்தகைய ஜவுளி பூங்கா அமைக்கப்படும். 25 மாவட்ட தலைநகரங்களில் மினி ஜவுளி பூங்கா உருவாக்கப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
3 லட்சம் பேருக்கு வேலை
மத்திய தொழில்துறை மற்றும் ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயல் காணொலி மூலமாக கலந்து கொண்டு பேசுகையில், "கலபுரகியில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஜவுளி பூங்காவால் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஜவுளித்துறையில் இந்தியா சர்வதேச அளவில் போட்டி போட்டு வளர்ந்து வருகிறது" என்றார்.
மத்திய ரெயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை மந்திரி தர்சன் ஐர்தோஸ் பேசும்போது, "கலபுரகி உள்பட 7 நகரங்களில் மெகா ஜவுளி பூங்கா அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த பூங்காவுக்கு ஆண்டுக்கு தலா ரூ.800 கோடி வீதம் வருகிற 2028-ம் ஆண்டு வரை நிதி உதவி அளிக்கப்படும். கலபுரகியில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார். இந்த விழாவில் ரூ.1,900 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த விழாவில் மத்திய இணை மந்திரி பகவந்த் கூபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.