மாறுவேடத்தில் சென்ற பெண் போலீஸ்; மருத்துவக் கல்லூரி ராகிங் குற்றவாளிகள் சிக்கினர் வழக்கின் ஆச்சரிய பின்னணி...!
24 வயது பெண் போலீஸ் ஒருவர் மருத்துவக் கல்லூரி மாணவி போல உள்ளேச் சென்று குற்றவாளிகளை அடையாளம் காட்டியுள்ளார்.;
போபால்,
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியான மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் ராகிங் நடப்பதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவி எண்ணுக்கு புகார் வந்தது.
இதன் அடிப்படையில், கடந்த ஜூலை 24ஆம் தேதி வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
ராகிங் நடந்தது பற்றி விரிவாகப் புகாரில் இருந்ததே தவிர, செய்தவர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. எத்தனை பேர் இதில் ஈடுபட்டார்கள் என்றும் தெரியவரவில்லை.
இதையடுத்து, பெண் போலீஸ் ஒருவர் கல்லூரிக்கு மாணவி போல அனுப்பிவைக்கப்பட்டார். அனைத்து மாணவர்களுடனும் நன்கு பேசிப் பழகி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரின் விவரங்களையும் அவர் திரட்டியுள்ளார்.
அது மட்டுமல்லாமல், ஒரு பெண் போலீஸ் செவிலியர் போலவும், இரண்டு தலைமைக் காவலர்கள் உணவக ஊழியர்கள் போலவும் பணியில் சேர்ந்து, இந்த ராகிங் கொடுமையில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
போலீசார் மாறுவேடத்தில் கல்லூரிக்குள் நுழைந்து, ராகிங் நடந்ததா என்பதை உறுதி செய்ததோடு, முக்கியமாக இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 மாணவர்களையும் அடையாளம் காண உதவியிருக்கிறது.
மூத்த மருத்துவ மாணவர்கள், இளநிலை மாணவர்களை தவறாக நடந்துகொள்வது போல செய்ய வற்புறுத்தி ராகிங் கொடுமை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பட்டியல் கல்லூரி நிர்வாகத்துக்கு கிடைக்கப்பெற்றதும், அவர்கள் அனைவரும் கடந்த வாரம் மூன்று மாதங்களுக்கு கல்லூரியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.