உடல் பருமன் பிரச்சினையால் மருத்துவ மாணவி 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

மருத்துவ மாணவி பிரக்ருதி ஷெட்டி தற்கொலைக்கான காரணம் பற்றிய உருக்கமான கடிதம் சிக்கியது.

Update: 2023-11-14 02:22 GMT

மங்களூரு,

கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் குந்திகான் பகுதியில் ஏ.ஜே. மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பிரக்ருதி ஷெட்டி (வயது 20) என்பவர் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது சொந்த ஊர் பெலகாவி மாவட்டம் அதானி ஆகும். இவரது தந்தையும் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

பிரக்ருதி ஷெட்டி, கல்லூரியின் தங்கும் விடுதியில் தங்கியிருந்து மருத்துவம் படித்து வந்தார். அவரது அறை முதல் தளத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் பிரக்ருதி ஷெட்டி, தங்கும் விடுதியின் 6-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தற்கொலை செய்த மாணவி பிரக்ருதி ஷெட்டியின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பிரக்ருதி ஷெட்டி தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது பிரக்ருதி ஷெட்டி தற்கொலைக்கான காரணம் பற்றிய உருக்கமான கடிதம் சிக்கியது.

அந்த கடிதத்தில், "எனது உடல் மிகவும் பருமனாக உள்ளது. உடல் எடையை குறைக்க கடுமையான பயிற்சி மேற்கொண்டேன். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. அடிக்கடி உடல்நலமும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்து நான் தற்கொலை முடிவை தேடிக்கொள்கிறேன். எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள்" என உருக்கமாக எழுதி வைத்திருந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல் பருமன் பிரச்சினையால் மருத்துவ மாணவி 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்