8 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த அதிகபட்ச மழை... வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு...!

கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரில் மிதந்து வருகிறது.

Update: 2022-09-05 15:22 GMT

பெங்களூரு,

கர்நாடகாவில் பருவமழை தொடங்கியதில் இருந்தே அதிக மழைப்பொழிவு பதிவாகி வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களாக கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஏரி குளங்கள் நிரம்பி வழிந்து ஓடுகிறது.

இந்த நிலையில் பெங்களூருவில் 8 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்சமான மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. இதனால் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும், பல இடங்களில் வாகனங்களும் மாநகர பேருந்துகளும் வெள்ள நீரில் மூழ்கி பழுதாகி நின்றது.

விமான நிலையத்துக்குள் மழை நீர் புகுந்தது. பழைய விமான நிலைய சாலையில் வெள்ளத்தில் பஸ்கள் சிக்கி கொண்டன. சாலை வெள்ளத்தில் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மிதந்தன. பாலகெரே பானத்தூர் சாலை ஆறு போல் காட்சி அளிக்கிறது. கனமழை-வெள்ளம் காரணமாக பெங்களூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அவசர தேவைகள் தவிர, வீடுகளை விட்டு வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பெங்களூரு நகர் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். பெங்களூரு புறநகரில் உள்ள ஐ.டி. நிறுவனங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. பல பகுதிகளில் மரங்கள் சரிந்து விழுந்தன.

பெங்களூரு நகரம் கடந்த ஒரு வாரத்தில் 2-வது முறையாக வெள்ளத்தில் மிதந்து வருகிறது. கடந்த 30-ந்தேதி பெய்த பலத்த மழையால் பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது மீண்டும் பலத்த மழை பெய்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

பெங்களூருவின் ஏமலூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், பல ஐடி நிறுவன ஊழியர்கள் டிராக்டர்களில் தங்கள் அலுவலகங்களுக்குச் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்