கோவில் திருவிழாவின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரமுகர் கோடாரியால் வெட்டிக்கொலை - கேரளாவில் பயங்கரம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரமுகர் கொலை சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அபிலாஷ் (30) என்ற வாலிபர் போலீசில் சரண் அடைந்தார்.;
திருவனந்தபுரம்,
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் செருவட்டூர் பகுதியை சேர்ந்தவர் சத்தியநாதன் (வயது 62). இவர் கொயிலாண்டி நகர மத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிராந்திய செயலாளராக இருந்தார். இவருடைய மனைவி லதிகா. இவர்களுக்கு சலீல் நாத் என்ற மகனும், சலீனா என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு செருவட்டூர் அருகே முத்தாம்பி பகுதியில் உள்ள பெரியபுரம் பரதேவதா கோவில் திருவிழாவில் நடந்த மெல்லிசை நிகழ்ச்சியை சத்தியநாதன் பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், கோடாரியால் சத்தியநாதனின் கழுத்தை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் சத்தியநாதன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சத்தியநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கொயிலாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மெல்வின் ஜோசப் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த அபிலாஷ் (30) போலீசில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் கொயிலாண்டி நகராட்சியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் நான் உறுப்பினராக இருந்த போது, என்னை டிரைவர் வேலையில் இருந்து நீக்க கட்சி நடவடிக்கை எடுத்தது. அப்போது எனக்கு ஆதரவாக சத்தியநாதன் செயல்படவில்லை. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நான் ஆத்திரம் அடைந்து, சத்தியநாதனை கொலை செய்தேன். இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இதைத்தொடர்ந்து கொயிலாண்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு போலீஸ் ஐ.ஜி. சேதுராமன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.