தமிழக முன்னாள் கவர்னர் சென்னா ரெட்டி மகன் காங்கிரசில் இருந்து விலகல்
தமிழக முன்னாள் கவர்னர் சென்னா ரெட்டி மகன் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்,
ஆந்திராவில் முதல்-மந்திரியாகவும், தமிழகத்தில் கவர்னராகவும் பதவி வகித்தவர் மறைந்த சென்னா ரெட்டி. இவரது மகன் மர்ரி சசிதர் ரெட்டி (வயது 67), தெலுங்கானா மாநில காங்கிரஸ் மூத்த தலைவராக திகழ்ந்தார். மந்திரி பதவியும் வகித்துள்ளார்.
இவர் நேற்று திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சித்தலைவர் கார்கேவுக்கு அனுப்பினார். முன்னாள் தலைவர் சோனியாவுக்கு, தான் கட்சியில் இருந்து விலகுவதற்கான பின்னணியை தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார்.கட்சி விவகாரங்களில் பணம் ஆதிக்கம் செலுத்துவதாகவும், மாநிலத்தை ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதியை வலுவாக எதிர்கொள்ளும் நிலையில் கட்சி இல்லை எனவும், கட்சியின் மாநில தலைவர்கள், பொறுப்பாளர்கள் திறம்பட செயல்படுவதில்லை என்றும் அந்தக் கடிதத்தில் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.சசிதர் ரெட்டி, 25-ந் தேதி பா.ஜ.க.வில் ஐக்கியம் ஆகப்போவதாக அறிவித்துள்ளார்.இது தெலுங்கானாவில் காங்கிரசுக்கு விழுந்த அடியாக பார்க்கப்படுகிறது.