மராத்தா சமூகத்தினர் போராட்டங்கள் மூலமாக இடஒதுக்கீடு கோரி அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - பங்கஜா முண்டே
இடஒதுக்கீடு பிரச்சினையில் மராத்தா சமூகத்தினர் அரசின் வெற்று வாக்குறுதிகளை விரும்பவில்லை என பங்கஜா முண்டே கூறியுள்ளார்.
மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான பங்கஜா முண்டே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
வெற்று வாக்குறுதி
மராத்தா சமூகம் அரசின் வெற்று வாக்குறுதிகளை விரும்பவில்லை. அவர்கள் தாங்கள் தவறாக வழிநடத்தப்படுவதை விரும்பவில்லை. இடஒதுக்கீடு விவகாரத்தில் உறுதியான நடவடிக்கையை அவர்கள் விரும்புகிறார்கள்.
மராத்தா மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இடையே சண்டையை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் என்று மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன். இரு சமூகத்தினருக்கு இடையேயான சண்டையை இந்த மாநிலம் பார்க்க விரும்பவில்லை.
அழுத்தம் கொடுக்க வேண்டும்
மராத்தா சமூகத்தினர் போராட்டங்கள் மூலமாக இடஒதுக்கீடு கோரி அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின்படி என்ன செய்ய முடியுமோ அதை அரசு செய்ய வேண்டும். இந்த பிரச்சினையில் யாரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் விபரீத முடிவுக்கு செல்ல வேண்டாம். உங்கள் போராட்டம் வரும் தலைமுறைக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.