இழிவாக பேசுவதற்கு முன் சனாதன தர்மத்தின் வரையறையை புரிந்துகொள்ள வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வைத்யா

இழிவாக பேசுவதற்கு முன்பு சனாதன தர்மத்தின் வரையறையை புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி மன்மோகன் வைத்யா கூறினார்.

Update: 2023-09-16 21:30 GMT

சனாதன சர்ச்சை

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் சமூகத்தில் பிளவை விதைத்துள்ளது என்றும், டெங்கு, மலேரியா, கொரோனா போன்று இதுவும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பா.ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தநிலையில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் புனேயில் நடந்த 3 நாட்கள் கூட்டம் நேற்று நிறைவு பெற்றது. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச்செயலாளர் மன்மோகன் வைத்யா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வாழ்க்கை முறை

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று சிலர் பேசுகிறார்கள். ஆனால் அந்த வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் அவர்களுக்கு தெரியுமா?. அவர்கள் சனாதன தர்மத்தை அவமதிக்கும் முன்பு அந்த வார்த்தையின் அர்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

என்றும் நிலைத்திருக்க கூடியது என்பது தான் சனாதனத்தின் பொருள். இது இந்தியாவின் ஆன்மிக வாழ்க்கை முறை அடிப்படை ஆகும். இதன் மூலமாக இந்தியாவின் ஆளுமை வடிவம் பெற்றுள்ளது.

தி.மு.க தலைவர்கள் கூறுவது வெறும் அரசியல் கருத்து தான். வரலாற்றில் பலர் சனாதன தர்மத்தை ஒழிக்க முயன்று தோற்று போனார்கள். தர்மத்திற்கு எப்போது பிரச்சினை வந்தாலும் அதை காக்க நான் வருவேன் என்று பகவான் கிருஷ்ணர் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதே பாதையில் தான் செல்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பாரத் பெயர் விவகாரம்

தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் பாரத் பெயர் விவாதம் குறித்து பதிலளித்த அவர், "பாரத் என்ற பெயருக்கு ஒரு நாகரீக மதிப்பு உள்ளது. 2 பெயர்களை கொண்ட நாடுகள் இருக்க முடியாது. அதனால் தான் நமது நாட்டை பாரத் என்று அழைக்க வேண்டும்" என்றார்.

பா.ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி குறித்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மதிப்பீடு குறித்து கேட்டதற்கு, "2014-ம் ஆண்டுக்கு பிறகு பாரதம் மெதுவாக அதன் கலாசார அடையாளத்தில் நிற்கிறது. இந்தியாவின் வெளிநாட்டு பாதுகாப்பு மற்றும் கல்வி கொள்கைகள் பெரிய மாற்றங்களை கண்டுள்ளன. உலகமும் இந்த மாற்றங்களை உணர தொடங்கி உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக நடந்த சம்பவங்களை சரிசெய்ய 25 முதல் 30 ஆண்டுகள் ஆகும். ஆனால் இப்போது எல்லாம் சரியான திசையில் செல்வதாக அனைவரும் உணர்கிறார்கள்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்