வடமாநிலங்களில் கனமழை பாதிப்புக்கு பலர் பலி

டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பாதிப்புக்கு பலர் பலியாகி உள்ளனர்.

Update: 2023-07-09 07:12 GMT

புதுடெல்லி,

வடஇந்திய மாநிலங்களில் மேற்கத்திய காற்று வீச்சால், டெல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று தீவிர கனமழை பெய்து உள்ளது.

இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், டெல்லி, அரியானா, இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற மாநிலங்களில் கன முதல் தீவிர கனமழை பெய்ய கூடும் என கணிப்பு வெளியிட்டு உள்ளது.

டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று கனமழை பெய்தது. இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணிநேரத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 153 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

இதனால் டெல்லிவாசிகளுக்கு அசவுகரியம் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளது. கடந்த 1982-ம் ஆண்டு ஜூலைக்கு பின்பு அதிக மழை பொழிவு ஏற்பட்டு உள்ளது. இந்த மழையால், பலர் உயிரிழந்து உள்ளனர்.

டெல்லியில் பிளாட் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 58 வயது பெண் உயிரிழந்து உள்ளார். ராஜஸ்தானில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 4 பேர் உயிரிழந்து உள்ளனர். உத்தர பிரதேசத்தில் வீட்டின் மேற்கூரை இன்று காலை இடிந்து விழுந்ததில் பெண் மற்றும் அவரது 6 வயது மகள் உயிரிழந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்