வலிமையான இந்தியாவை உருவாக்க பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன - பிரதமர் மோடி
வலிமையான இந்தியாவை உருவாக்க அடித்தளமாக கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என பிரதமர் மோடி கூறினார்.
டெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். 17வது மக்களவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
பிரதமர் மோடி கூறியதாவது,
17வது மக்களவையான கடந்த 5 ஆண்டுகளில் சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றத்தை நாம் கண்டுள்ளோம். 17வது மக்களவையை நாடு ஆசீர்வதிக்கும் என நான் நம்புகிறேன். சீர்திருத்தமும், செயல்பாடும் ஒரேநேரத்தில் நடந்து மாற்றம் நம் கண்முண்ணே நடப்பது மிகவும் அபூர்வமானது. இந்த அபூர்வத்தை 17வது மக்களவை மூலம் நாடு அனுபவித்தது.
17வது மக்களவையில் 97 சதவிகித செயல்திறன் கிடைத்துள்ளது. கடந்த 7 கூட்டத்தொடரில் 100 சதவிகித செயல்திறன் ஆகும். வலிமையான இந்தியாவுக்கு அடித்தளம் அமைக்கும் முக்கியமான சீர்திருத்தங்கள் கடந்த 5 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டம் ரத்து போன்ற மிகவும் நீண்டகாலமாக காத்திருந்த முடிவுகள் இந்த மக்களவை தொடரில் எடுக்கப்பட்டன. முத்தலாக் தடை, பெண்களுக்கு இடஒதுக்கீடு போன்ற முக்கிய முடிவுகள் இந்த மக்களவை தொடரில் எடுக்கப்பட்டன' என்றார்.