மணிப்பூர் விவகாரம்: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை தொடர்ந்து முடங்கியதையடுத்து நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2023-07-31 10:30 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அலுவல்களும் 8-வது நாளாக இன்று காலை தொடங்கியவுடன் மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகல் மீண்டும் அவை கூடியவுடன் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே ஒளிப்பதிவு திருத்த மசோதாவை மத்திய மந்திரி அனுராக் தாகூர் தாக்கல் செய்த நிலையில்,  மக்களவையில் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து நாளை காலை 11 மணிவரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்