மங்களூரு சம்பவம்: உளவுத்துறையின் தோல்வியை அம்பலப்படுத்தியுள்ளது - சித்தராமையா

மங்களூரில் நடைபெற்ற வெடிவிபத்து உளவுத்துறையின் தோல்வியை அம்பலப்படுத்தியுள்ளது என கர்நாடகா முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-20 08:23 GMT

Image Courtesy: PTI

மங்களூரு,

கர்நாடக மாநிலம் மங்களூரில் நேற்று ஆட்டோ ஒன்றில் மர்ம பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரும், பயணியும் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்துக்குள்ளான ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்றை கைப்பற்றினர்.

ஆட்டோவில் வெடிப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது வெடி விபத்து ஏற்பட்டதா அல்லது குக்கர் வெடித்ததால் தீப்பிடித்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆட்டோவில் கைப்பற்றப்பட்ட குக்கரில் வயர்கள் கொண்ட சர்க்யூட் அமைப்பு இருந்துள்ளது.

இந்த நிலையில், ஆட்டோவில் நடந்த வெடிவிபத்து தற்செயலானது அல்ல, அது தீவிரவாதச் செயல் என்றும் அதனை உறுதிப்படுத்தி விட்டதாக கர்நாடக டிஜிபி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மங்களூரில் நடைபெற்ற வெடிவிபத்து உளவுத்துறையின் தோல்வியை அம்பலப்படுத்தியுள்ளது என கர்நாடகா முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "மங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பு பயங்கரவாத செயல் என்பதை டிஜிபி உறுதி செய்துள்ளார். இந்த வன்முறைச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தச் செயலுக்கு காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு காவல்துறையை வலியுறுத்துகிறேன்.

குண்டுவெடிப்பு உளவுத்துறையின் தோல்வியை அம்பலப்படுத்தியுள்ளது. இதற்கு உள்துறை மந்திரி பொறுப்பை ஏற்க வேண்டும். மக்கள் பதற்றமடைய வேண்டாம், சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்