5 பிள்ளைகள் இருந்தும் அனைவரும் கைவிட்டதால் விரக்தி - ரூ. 1.50 கோடி சொத்தை மாநில அரசுக்கு எழுதிய வைத்த முதியவர்

மரணமடைந்த பிறகு தன் இறுதிச்சடங்கில் பிள்ளைகள் யாரும் பங்கேற்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-03-06 11:27 GMT

 லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் பதானா கிராமத்தை சேர்ந்த முதியவர் நது சிங் (வயது 85). இவருக்கு ஒரு மகன், 4 மகள்கள் என மொத்தம் 5 பிள்ளைகள் உள்ளனர்.

மகள்கள் அனைவருக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டது. நது சிங்கின் மகன் சஹரன்பூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

இதனிடையே, நது சிங்கின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன் வயதுமுதிர்வால் உயிரிழந்துவிட்டார். மனைவி உயிரிழந்ததையடுத்து நது சிங் தனியாக வாழ்ந்தார். மகன், மகள்கள் என பிள்ளைகள் 5 பேர் இருந்தபோதும் தன்னை யாரும் கவனிக்காததால் கடந்த 7 மாதங்களுக்கு முன் நது சிங் தனது கிராமத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்ந்தார்.

முதியோர் இல்லத்தில் சேர்ந்து 7 மாதங்கள் ஆன போதும் நது சிங்கை அவரது மகனோ, 4 மகள்களோ யாரும் வந்து சந்திக்கவில்லை.

5 பிள்ளைகள் இருந்தும் யாரும் சந்தை வந்து சந்திக்காததாலும், அவர்கள் அனைவரும் கைவிட்டதாலும் விரக்தியடைந்த நதுசிங் தனது சொத்து அனைத்தையும் உத்தரபிரதேச அரசுக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.

தனது மறைவுக்கு பின் கிராமத்தில் உள்ள தனது வீடு, 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள தன் நிலம் உள்ளிட்ட சொத்துக்களை மாநில அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நதுசிங் உயில் எழுதி வைத்துள்ளார்.

மேலும், தன் நிலத்தில் மாநில அரசு பள்ளிக்கூடம் அல்லது மருத்துவமனையை கட்ட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தன் மறைவுக்கு பின் தன் சொத்துக்களை உத்தரபிரதேச அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் உயில் எழுதி வைத்துள்ளார். இதுமட்டுமின்றி தன் உடலை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கியுள்ள நதுசிங் தன் மறைவுக்கு பின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் மகன், 4 மகள்களும் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் உயில் எழுதி வைத்துள்ளார்.

சொத்துக்கள் அனைத்தையும் நதுசிங் மாநில அரசுக்கு எழுதிவைத்துள்ளது தொடர்பாக கூறிய சார்பதிவாளர், நதுசிங்கின் சொத்துக்கள் அவரது மறைவுக்கு பின் மாநில அரசின் கீழ் கொண்டுவரப்படும் என்று கூறினார்.

5 பிள்ளைகள் இருந்தும் யாரும் கவனிக்காததால் 1.50 கோடி ரூபாய் சொத்துக்களை முதியவர் மாநில அரசுக்கு எழுதிவைத்துவிட்டு, இறுதிச்சடங்கில் பிள்ளைகள் யாரும் பங்கேற்கக்கூடாது என்று உயில் எழுதி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.      

Tags:    

மேலும் செய்திகள்