மனைவியை சுட்டுக்கொன்ற சில நிமிடங்களில் மாரடைப்பால் உயிரிழந்த கணவர் - அதிர்ச்சி சம்பவம்
தன் மனைவியை சுட்டுக்கொன்ற சில நிமிடங்களில் திலீப் மாரடைப்பால் உயிரிழந்தார்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் கல்வா பகுதியை சேர்ந்தவர் திலீப் சால்வி (வயது 56). இவரது மனைவி பிரமிளா (வயது 51). திலீப் சால்வே தானே மாவட்ட முன்னாள் மேயர் கணேஷ் சால்வியின் சகோதரன் ஆவார். திலீப் சால்வி அப்பகுதியில் அரசியல் பின்புலத்தை கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.
இந்நிலையில், தீலிப் சால்வே நேற்று இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, திலீப்பிற்கும் அவரது மனைவி பிரமிளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் தன் மனைவி பிரமிளாவை திலீப் 2 முறை சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பிரமிளா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
மனைவியை சுட்டுக்கொன்ற சில நிமிடங்களில் திலீப்பிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், அவரும் சுருண்டு விழுந்தார். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு விரைந்து வந்த திலீப்பின் மகன் தன் தாயார் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும், தந்தை மயங்கி கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். திலீப் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
மனைவியை சுட்டுக்கொன்ற கணவன் மாரடைப்பால் உயிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.