சுவீடன் இளம்பெண் பலாத்கார வழக்கில் பரோலில் வந்த நபர் படுகொலை; மர்ம நபர்கள் வெறிச்செயல்

டெல்லியில் சுவீடன் இளம்பெண் பலாத்கார வழக்கில் பரோலில் வந்த நபர் இன்று காலை மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.;

Update: 2023-03-23 11:43 GMT


புதுடெல்லி,


டெல்லியில், சுவீடன் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முகமது ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்து உள்ளார்.

இந்நிலையில், மண்டவாலி நகரில் பூலியா தலாப் சவுக் பகுதியை சேர்ந்தவரான அவர், மத்திய டெல்லியில் பஹர்கஞ்ச் பகுதியில் ரெயில் தண்டவாளத்திற்கு அருகே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இந்த சம்பவம் பற்றி துணை காவல் ஆணையாளர் சஞ்சய் குமார் சென் கூறும்போது, குற்றவாளி படுகாயம் அடைந்த நிலையில் தரையில் கிடந்து உள்ளார். அவரருகே, 3 பேர் காயங்களுடன் கிடந்தனர். 4 பேரும் அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால், முகமது ராஜா உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறி விட்டனர். அவர்களுடன் இருந்த மற்ற 3 பேர் விஜய் என்ற ரகீம், சுந்தர்லால் மற்றும் ரபி என அடையாளம் காணப்பட்டு உள்ளது.

இந்த 3 பேரும் டெல்லியின் மண்டவாலி, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மற்றும் மேற்கு வங்காளத்தின் மால்டா பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். போலீசார், கொலை மற்றும் கொலை முயற்சி என தனித்தனியே இரு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இரு கும்பலுக்கு இடையே நடந்த மோதலில் இந்த சம்பவம் நடந்து உள்ளது என போலீசார் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் குடிபோதைக்கு அடிமையானவர்கள் என போலீசார் கூறியுள்ளனர். இதில் தொடர்புடைய 2 பேரை கைது செய்து, போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்